இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதா? : காவல்துறை விளக்கம்!

Published On:

| By christopher

nellai Police explanation on young man's poonul cut

நெல்லையில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என்று காவல்துறை தரப்பில் இன்று (செப்டம்பர் 22) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் அருகே இளைஞரின் பூணூலை நான்கு பேர் சேர்ந்த கும்பல் அறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, நேற்று திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வந்ததன் எதிரொலியாக தான், நெல்லையில் பூணூல் அறுக்கும் அராஜக சம்பவம் அரங்கேறி இருப்பதாக நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டி இருந்தார்.

Image

எல்.முருகன் நேரில் ஆறுதல்!

தொடர்ந்து இன்று நெல்லை டவுண் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நெல்லை தியாகராஜ் நகரில் இளைஞரின் பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத் தக்கது. வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்ற நபரிடம் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.  மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை என்று திருநெல்வேலி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பூணுலை அறுத்ததாக புலப்படவில்லை!

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS நகரில் கடந்த 21ஆம் தேதி மாலை சுமார் 04.30 மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து அகிலேஷ் என்ற இளைஞரின் பூணுலை அறுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் 460/24 CSR பதிவு செய்யப்பட்டது.

இப்புகார் தொடர்பாக காவல் துறையினரால் அன்றைய தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட சாலையிலும் உள்ள CCTV காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

Image

மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணுலை அறுத்ததாக புலப்படவில்லை.

மேற்படி CCTV காமிரா பதிவுகளை பார்வையிட்டதிலிருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணுலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை” என நெல்லை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கரகாட்டக்காரன் கனகாவா இது… போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எப்படி?

இருந்தாலும் அப்படி கேட்டுருக்க கூடாது: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share