கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து பெரிய மாநகராட்சியான கோவையில் 100 வார்டுகள் உள்ளது.
இதில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அதிமுக கவுன்சிலர்கள்.
இதில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா ஆனந்த குமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார்.
கல்பனா ஆனந்தகுமார், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்புகுழு உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் மேயர் கல்பனா மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு புகார்களை திமுக கவுன்சிலர்களே தெரிவித்திருக்கின்றனர்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தலைமை அழைத்து விசாரித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் நேற்று முதல் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பியுள்ளார்.
கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார்.
கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேயர் சரவணனுக்கும், திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.
திமுக மாமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர்.
இந்த சூழலில் அதிருப்தி கவுன்சிலர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் மேயர் சரவணன் விவகாரம் தொடர்பாக பேசினர்.
அப்போது மின்னம்பலத்தில் இது குறித்து “நெல்லை மேயர் விவகாரம்: தங்கம் தென்னரசு, அன்பகம் கலை நடத்திய க்ளைமேக்ஸ் பஞ்சாயத்து!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
“மேயர் சரவணனை நிச்சயம் மாற்றுவோம். ஆனால் இந்த வழிமுறை தவறு. தலைமையே முடிவெடுத்து அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து புதிய மேயரை தேர்வு செய்யும் என்று அதிருப்தி கவுன்சிலர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் தங்கம் தென்னரசுவும் அன்பகம் கலையும்” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இதனால் அப்போது மேயர் சரவணன் மீது திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்தசூழலில் மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஒரே நாளில் திமுகவை சேர்ந்த இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்திருப்பது திமுகவினரிடையே பேசு பொருளாகியிருக்கிறது.
சரவணனின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் நிலையில் துணை மேயர் ராஜூவுக்கு மேயர் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக வரும் திங்கள் கிழமை 8ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவ் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கோவை திமுக மேயர் கல்பனா ராஜினாமா! அடுத்த மேயர் யார்?
அமைச்சர் அனிதாவுக்கு எதிரான ED மனு தள்ளுபடி! நிம்மதியில் அமைச்சர்கள்… அப்பீலுக்கு தயாராகும் ED