“எனது அப்பாவுக்கு பிறகு அடுத்த டார்கெட் நான் தான்” என்று ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரகுமான் இன்று (மார்ச் 22) வீடியோ வெளியிட்டுள்ளார். Zakir Hussain son target
நெல்லையில் முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் கிருஷ்ணமூர்த்தி (எ) தாவூகித், அவரது மனைவி நூர்ஜகான் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் தாவூகித், அவரது தம்பி கார்த்திக், நூர்ஜகான் தம்பி அக்பர் ஷா ஆகியோரை கைது செய்தனர். நூர்ஜகானை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரகுமான் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது அப்பாவுக்கு பிறகு அடுத்த டார்கெட் நான் தான். இன்றைக்கு ஒருவர் ஹெல்போட்டுக்கொண்டு இருசக்கர வானத்தில் எனது வீட்டு முன்பு வந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். நான் வீட்டு வெளியே சென்று பார்த்தபோது வண்டியை எடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
நான் சாவுக்கு பயப்படவில்லை. சாவுக்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்ஜகானை இன்னும் கைது செய்யவில்லை. நூர்ஜகான் வெளியே இருந்தால், இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்து நீர்த்துப்போகச் செய்ய முயற்சி செய்து கொண்டே இருப்பார். அவரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?
காவல் அதிகாரிகளை காப்பாற்ற நினைக்காதீர்கள். இதனால் உங்கள் அரசாங்கத்திற்கு தான் அவப்பெயர். இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில் குமார் ஆகியோரை டிஸ்மிஸ் செய்யுங்கள். கிருஷ்ணமூர்த்தி மீது குண்டாஸ் போடுங்கள். அதை விடுவித்து அதிகாரிகளை காப்பாற்ற நினைத்தால் தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இங்கு முஸ்லிம் சமூகத்தினர் தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிப்பவர்கள்.

மிகவும் அச்சமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு கண்டிப்பாக பாதுகாப்பு வேண்டும். நான் வீட்டில் இல்லை என்றால் எனது அம்மா மட்டும் தான் தனியாக இருப்பார்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஜாகிர் உசேன் வீட்டிற்கு இன்று இரண்டு துப்பாக்கிகள் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.