நெல்லை உஸ்மான்
நெல்லையின் அடையாளமாக விளங்கி வரும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள் அதுவும் கொரோனா பாசிட்டிவ் என்பதை அறிந்து தற்கொலை செய்துகொண்டு விட்டார்கள் என்ற தகவலை இன்று (ஜூன் 25) காலை ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இரு நாள்கள் முன்பு ஹைசுகர் பாதிப்பால் சென்றிருக்கிறார். இப்போதெல்லாம் யார் எதற்காக மருத்துவமனைக்கு வந்தாலும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன்படியே அண்ணாச்சிக்கும் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். இன்று காலைதான் ரிசல்ட் வந்திருக்கிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது.
தினம் தினம் எல்லாருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டே இருந்த ஹரிசிங் இன்று கசப்பான செய்தியை காதுகளுக்குக் கொடுத்துவிட்டார். ஆனாலும், நெல்லை இருட்டுக் கடைக்குச் சென்று அவரோடு உரையாடிய ஞாபகங்கள் நெஞ்சுக்குள் அல்வா துண்டுகளாக இனிக்கின்றன.
என் பள்ளிக் காலங்களில் நெல்லையப்பர் கோயிலில் வடக்கு வாசல் பகுதியில் இருக்கும் யானைகட்டும் இடத்துக்குப் பக்கத்தில்தான் பரிட்சையின் போது படிக்கச் செல்வேன். அமைதியான இடமாக இருக்கும் என்பதால் அங்கே அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போதுதான் ஹரிசிங் நெல்லையப்பரைக் கும்பிட வந்து கோயிலைச் சுற்றி வந்துகொண்டிருப்பார். ‘என்னடா படிக்கிறியா… நல்லா படிக்கணும்’ என்பார்.
பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம் என்றாலும் ஹரிசிங் பிறந்து வளர்ந்தது எல்லாம் நெல்லைதான். அதனால் அல்வாவோடு அவரது தமிழும் இனிக்கும். நெல்லை ஜமீன் தார் ஒருவர் ராஜஸ்தான் சென்றபோது அங்கே அல்வா சாப்பிட்டதாகவும், அவர்தான் அல்வா செய்யும் குடும்பத்தினரை நெல்லைக்கு கூட்டி வந்து இங்கேயே தொழில் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் சீனியர் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே அல்வா கடை என்பதால் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். பக்கத்தில் அவரது வீட்டில் இருந்து தட்டுத் தட்டுகளாக அல்வா வந்து இறங்கும். தன் கையாலேயே துண்டு போடுவார். வெளியூர் காரக்கள் நிறைய பேர் வந்திருப்பார்கள். யார் யார் வெளியூர் என்று விசாரித்து அவர்களுக்கு முதலில் அல்வா கொடுப்பார்.
‘அண்ணாச்சி உள்ளூர்காரன், உள்ளூர் தெருக்காரன் கேக்கேன். வெளியூர்காரவுகளுக்கு தாரியலே’ என்று கேட்பேன். அதற்கு ஹரிசிங் சிரித்துக் கொண்டே பதில் சொல்வார். ‘இருடா… நீ பெறவு வாங்கிக்கலாம். அவங்க இனிமே எப்ப வருவாங்களோ?’ என்ற அந்த கேள்வியில் மனிதாபிமானம் மட்டுமல்ல வணிக உத்தியும் இருக்கும். வெளியூர் காரர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டால் மீண்டும் அவர்கள் மூலமாக இன்னும் சிலர், அவர்கள் மூலமாக இன்னும் சிலர் என்று அல்வாவின் வர்த்தக சங்கிலி அறுந்துவிடாமல் இருக்கும் அல்லவா?
25 வருடமாக அல்வா கடையைப் பார்த்து வருகிறேன். கடந்த ஆறேழு ஆண்டுகளாகத்தான் கடும் கூட்டம், காத்திருப்பு, தீர்ந்துவிடுதல் எல்லாம். அதற்கு முன் எல்லாம் திமுதிமுவென கூட்டம் இருக்காது எனினும் கடுமையான வியாபாரமாகத்தான் இருக்கும். எல்லா கடையிலும் மின்சார விளக்குகள் எரிந்தபோதும் இருட்டுக் கடை என்ற தனது அடையாளத்தை தக்க வைக்கவோ தொடர வைக்கவோ லைட் போடவே மாட்டார். 15 வருடங்களுக்கு முன்புதான் 40 வால்ட்ஸ் பல்பு ஒன்றை மாட்டினார்.
அவரது கடை மிக எளிமையாக இருக்கும். ஒரே ஒரு மர பீரோ. கண்ணாடிக்குள் தட்டுகளில் அல்வாக்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆடம்பர பர்னிச்சர்கள் எதுவும் இருக்காது. அங்கேயே நின்று அல்வா சாப்பிடுபவர்களுக்கு திகட்டு தட்டாமல் இருப்பதற்காக மிக்சர், காராபூந்தி போன்ற கார வகைகளும் கிடைக்கும். அல்வா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவரே கையால் அள்ளி கொசுறு காரம் கொடுப்பார். அதையும் இதையும் சேர்த்து சாப்பிடும்போதுதான் நெல்லை அல்வா சுவையின் வீரியம் கூடும். அல்வா சாப்பிட்ட பின் கையை துடைத்துக் கொள்வதற்கு பழைய புத்தகத் தாள்களை வைத்திருப்பார்.
நான் ஒரு நாள் அல்வா சாப்பிட்டு முடித்த பின், ‘அண்ணாச்சி திஸ்யூ பேப்பர் வச்சாதான் என்னா?” என்று கேட்டேன். ‘இது அமெரிக்கா இல்லடா…’ என்றார் சிரித்துக் கொண்டே. அல்வாவின் சுவை மட்டுமல்ல கடையின் அமைப்பும், இயல்பும் பாரம்பரியத்தோடே இருக்க வேண்டும் என்ற அவரது தீர்மானம்தான் அந்த சிரிப்பில் தெரிந்தது.
ஊரடங்கு நாட்களில் கடையின் வியாபாரக் குறைவு ஒருபக்கம் அவரை வாட்டியது. அதைவிட, ‘எப்படி இருந்த திர்நெவேலி இப்படி பொலிவு போயி நிக்குதே’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். நெல்லையின் இனிப்பு அடையாளமான இருட்டுக்கடை அல்வா, இனியும் ஹரிசிங்கின் அர்ப்பணிப்பு உணர்வோடு அவரது குடும்பத்தினரால் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பது நெல்லையின் எதிர்பார்ப்பு. அந்தக் கடையை கடந்துவிடலாம். அண்ணாச்சி பற்றிய நினைவுகளை?
கட்டுரையாளர் குறிப்பு

உஸ்மான்கான் நெல்லைவாசி. இஸ்லாமிய அரசியல் அமைப்புகளில் செயல்பட்டு வந்தவர். சுற்றுச் சூழல் ஆர்வலர். தாமிரபரணி மாசு உள்ளிட்ட நெல்லையின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டக் களங்கள கண்டவர். மக்களுக்கான வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தி வருகிறார்.,”