நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இதயவியல், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரகவியல், மற்றும் சிறுநீரியல், உட்பட ஏழு மருத்துவ பிரிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை தளங்களும் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை, குமரி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி, மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனை கட்டிடத்தை ஒட்டி உள்ள பகுதியில் மருந்து கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , மருந்து பாட்டில்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடக்கின்றன.

பல தொற்று நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெறக்கூடிய இந்த மருத்துவ வளாகத்தில் குவியல் குவியலாக மருந்து கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால், இதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகைகள் நோயாளிகளை மட்டும் இன்றி அவர்களுடன் வரும் உறவினர்களையும் மிகவும் பாதிப்படைய செய்கின்றன.

இதுகுறித்து நேற்று (ஜூலை 4) புகைப்படத்துடன் மின்னம்பலத்தில் “அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “மருந்து கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சியின் உதவி தேவை என்று கல்லூரி டீன் கோரிக்கை வைத்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.
நமது செய்தி வெளியான நிலையில், மருந்து கழிவுகளை அப்புறப்படுத்தாமல், அதை மண்ணை கொண்டு முடியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஜேசிபி மூலம் அவசர அவசரமாக மருந்து கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மண், கற்களை கொண்டு மூடியுள்ளது.

ஒரு அரசு மருத்துவமனை நோயாளிகளின் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல், இப்படி அலட்சியமாக செயல்படுவது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
