நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா சிபிசிஐடி போலீசாரால் திருப்பதியில் இன்று (செப்டம்பர் 25) கைது செய்யப்பட்டார்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆஃபீசராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். அவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த புகாரைக் கல்லூரி விசாரணைக் குழு உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து மாணவர் உதித் சூர்யா மீது க.விலக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி அம்மாணவர் கல்லூரியிலிருந்து நின்றார். தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்த நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானால் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தது. இதற்கிடையில் தலைமறைவாக இருந்த மாணவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
உதித் சூர்யாவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் திருப்பதியில் இன்று அவரது குடும்பத்தினருடன் கைது செய்திருக்கின்றனர். உதித் சூர்யாவின் செல்போன் சிக்னல் மற்றும் அழைப்புகளை கண்காணித்ததில் மாணவர் திருப்பதியில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் அங்கு விரைந்தனர். திருப்பதி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாயார் கயல் விழியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்தால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்பதால் மும்பையில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியதாக தெரியவந்துள்ளது. உதித் சூர்யா தந்தை வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே ஆள் மாறாட்டம் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் தென்மண்டல எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் உதித் சூர்யா விசாரணைக்காகத் தேனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
