சிறப்புக் கட்டுரை: நீட் தேர்வு: விடைகளைத் தேடும் கேள்விகள்!.

Published On:

| By Balaji

பேரா.நா.மணி

பத்து கிலோ மீட்டர் தூரம், நடந்தே சென்று, பள்ளிப் படிப்பை முடித்தவர்”. “மதியச் சாப்பாடு இன்றி, காலுக்கு செருப்பு இன்றி பள்ளிப் படிப்பை முடித்து மருத்துவரானவர் இவர்” “பஸ்ஸே இல்லாத, படுபட்டிக்காட்டில் இருந்து படிச்சு வந்தவர்”… இப்படி, பல மருத்துவர்களை அதிலும் தலைசிறந்த மருத்துவர்களை இன்று நீங்கள் அடையாளம் காட்டலாம். இனி வரும் காலங்களில், மருந்துக்குக் கூட அப்படி ஒருவரை நீங்கள் கை காட்ட முடியாது. இது நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வு நுழைந்து விட்ட காலத்தின் எதிர்வினை.

2016 ஆம் ஆண்டு, நீட் தேர்வு இல்லாமல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 250 மாணவர்களில் 90 விழுக்காடு மாணவர்கள் வெளியூர் மாணவர்கள். விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். நீட் தேர்வுக்கு பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்போர் பெரும்பகுதியானவர்கள் சென்னை வாசிகளே. வீட்டில் இருந்து வந்து செல்பவர்கள். மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறந்த உதாரணம் இது. வரும் ஞாயிறன்று (13.09.2020)15.97 இலட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுத உள்ளனர். மாணவர்களின் வாழ்வதற்கான உரிமை, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை மையப் படுத்தி, ஆறு மாநில அரசுகள் தொடுத்த சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 2016-17 ஆம் ஆண்டு முதல் நீட் என்னும் நுழைவுத் தேர்வு வழியாக மட்டுமே மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் 28.04.2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. கீழ் காணும் காரணங்களுக்காக அத்தகைய தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

1) வெளிப்படைத் தன்மையோடு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 2) தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். 3) கட்டாய நன்கொடை இருக்கக் கூடாது. 4)பல நுழைவுத் தேர்வுகளை ஒரே படிப்புக்காக மாணவர்கள் எழுதும் நிலை இருக்கக் கூடாது.

நீட் தான் புனிதத் தேர்வா?

தமிழ் நாட்டில், மாநில அளவிலான பொது நுழைவுத் தேர்வு அமுலில் இருந்த காலத்திலும் சரி, அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் போதும் சரி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிய முதல் மூன்று முக்கிய விசயங்களையும் கறாராக பின்பற்றியே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் என்ன கூறியுள்ளதோ அவை எல்லாவற்றையும் தமிழ் நாடு அரசு அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றி வருகிறது. நீட் தேர்வுகளில் கடந்த ஆண்டு நடந்த மோசடிகள் போன்று எதுவும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் இத்தகைய தீர்க்க தரிசனப் பணியை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அத்தோடு, *தமிழ் நாட்டின் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு தனிச் சட்டத்தையும், மத்திய அரசும், குடியரசு தலைவரும் புறக்கணித்து விட்டனர். ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பும் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்க மாட்டார். நிராகரிக்கவும் மாட்டார். அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். வெறுமனே புறந்தள்ளி விடுவார் எனில் இந்திய அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு இப்படி வழிகாட்டுகிறது என்று தெரியவில்லை*.

மருத்துவ மாணவர்களை வெளிப்படைத் தன்மையோடு, தகுதி அடிப்படையில், கட்டாய நன்கொடை இன்றி சேர்க்க வேண்டும். அதற்காகவே நீட் தேர்வு, என்று கூறும் உச்ச நீதிமன்றத்திடமும், மத்திய அரசிடமும், பொது வெளியிலும் மக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றமோ மத்திய அரசோ இதுகாறும் பொருத்தமான பதிலைக் கூறவில்லை.

விடை கிடைக்காத கேள்விகள்!

விடை கூறப்படாத, விடை கண்டே தீர வேண்டிய அக்கேள்விகளை, மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் எழுப்புவதைத் தவிர, அதற்கான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதைத் தவிர, ஜனநாயக நாட்டில் வேறு மார்க்கம் இல்லை.

1) சமமற்ற மக்கள், சமமற்ற பாடத்திட்டங்கள், சமமான கற்றல் வாய்ப்புகள் இல்லை. சமனற்ற கற்றல் மொழி , சமனற்ற பொருளாதார வசதிகள். சமனற்ற கல்வி வாரியங்கள், இப்படிப் பல சமனற்ற தன்மைகளோடு வாழ்ந்து வரும் மக்களுக்கு சமமான தேர்வுகள் என்பது எப்படி சரியாகும்?

2) நீட் தேர்வுக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை மாணவர்கள் மொத்தம் ஒன்பது மணி நேரத் தேர்வாக எழுதுகிறார்கள். இதனை மூன்று மணி நேரத்தில் எப்படி சோதித்துப் பார்க்க முடியும்?

3) பள்ளிப் படிப்பும் அதன் மதிப்பெண்களும் மருத்துவ சேர்க்கை அல்லது பொறியியல் சேர்க்கை ஆகியவற்றுக்கு கிஞ்சிற்றும் பயன்படாது என்றால் முறையாக பள்ளிப் பாடத்தை கற்பார்களா? மாணவர்களின் ஒழுக்கம், கற்றல் இணை செயல்பாடுகளை எப்படி கற்றுக் கொள்வார்கள்?

4) நீட் தேர்வு வழியாக எதிர்பார்க்கப்படும் அம்சம், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கா? அல்லது நல்ல மருத்துவராக உருவெடுக்கவா?

5)ஒரு மருத்துவருக்கு அடிப்படை தேவை சேவை மனப்பான்மை. அதனை வார்த்தெடுக்க நீட் தேர்வில் உள்ள உள்ளடக்கம் என்ன?

6) மருத்துவர்கள் தரம் மற்றும் பயிற்சி ஆகிய இரண்டுமே மேம்பட வேண்டும். அதனை இந்த நீட் தேர்வு வழியாக செய்ய இயலுமா?

7) நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது முதல், சாதி மதம் என்னும் பேதம் இல்லாமல், அனைத்து சாதி மதங்களைச் சேர்ந்த பணக்காரர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர், நகர்புற மக்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார்கள். நீட் தேர்வு ஏழை மக்களுக்கு முற்றிலும் எதிரானது என்ற குற்றச்சாட்டை மறுக்க இயலுமா?

8) ஒரு மாநில அரசு தனது நிதியில் பள்ளிகளை உருவாக்கவும், பாடத்திட்டத்தை வடிவமைத்து கொள்ளவும் உரிமை இருக்கிறது. ஆனால், அதே மாநில அரசு, இதே வகையில் நடத்திவரும் கல்லூரிகளுக்கு சேர்க்கை முறைமையை உருவாக்கிக் கொள்ளக் கூடாதா? அதற்கு இந்திய அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி பிரிவுகளில் இடமில்லையா?

9) நீட் தேர்வு முறை மனப்பாடக் கல்வி முறைக்கு எதிரானது. புரிதலை சோதிக்கிறது என்ற கூற்று உண்மையெனில் ஆறாம் வகுப்பு முதல் வெளிமாநிலங்களில் சென்று நீட் தேர்வுக்காக தனிப் பயிற்சி பெறுபவர்களும் பிளஸ் டூ படித்து முடித்த பிறகு கேரளாவில் திருச்சூர் முதல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா வரை உள்ள தனிப் பயிற்சி மையங்கள் ஏன் புற்றீசல் போல் பெருகியுள்ளது?

10) பள்ளிகளிலோ தனிப் பயிற்சி மையங்களிலோ தனிப் பயிற்சி பெறாமல் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்?

11) நீட் தேர்வு தரத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதற்கு ஆதாரம் எங்கே? உதாரணமாக, *நீட் தேர்வில் 80 விழுக்காடு பெற்ற மாணவர் ஒருவருக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் பயில முடியவில்லை. அதேசமயம், குறைந்த தேர்ச்சி மதிப்பெண் 50 விழுக்காடு அல்லது 40 விழுக்காடு மட்டுமே பெற்ற மாணவர் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில முடிகிறது.* இந்த சூழ்நிலையில் “நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தரத்தின் அடிப்படையில் அமைந்தது” என்ற கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது?

12) நீட் தேர்வுக்கு முன்னர் கட்டாய நன்கொடை என்று மொத்தமாக பெற்றுக் கொண்டிருந்த தனியார் மருத்துவ கல்லூரிகள், இப்போது கட்டணங்கள் என்ற பெயரில் அதே தொகையை பல்வேறு வகைகளில் பிரித்து வாங்கிக் கொள்கிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர இப்போதும் நன்கொடையாக ஒரு தொகையை நிர்ணயம் செய்து வசூலிக்கும் கல்வி நிலையங்கள் இருக்கிறது என்கிறார்கள். மறைமுக கட்டணங்கள், விடுதிக் கட்டணங்கள் என பல பெயர்களில் இன்றளவும் கட்டாய கட்டணங்கள் தொடர்கிறது. இதற்கு அரசும் உச்ச நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது. இப்போதும் தனியார் மருத்துவ கல்லூரிகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லை. இடைத் தரகர்கள் இடம் பெற்று உள்ளனர் என்ற உண்மையை எப்படி நிரூபிப்பது?

13) ஏழை எளிய மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத, உயர் தனி கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைவதும் இத்தகைய பயிற்சிக்கு வகையற்ற மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் துரத்தியடிக்கப் படுவதும் தரம் என்ற பெயரில் தாக்குதல் அல்லது வடிகட்டுதல் என்பது தவிர வேறு என்ன?

மார்டன் மருத்துவக் கல்லூரி வழக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்!

14) மார்டன் மருத்துவக் கல்லூரி வழக்கில், 2.5.2016 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு “** ஒரு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிறுவனங்கள் தவிர்த்து, மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நிறுவனங்களும் செயல்படுவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகளே வகுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாநில அரசுகளை தவிர வேறு யாரும் அந்த மாநிலத்தின் தேவைகள், ஏற்றத் தாழ்வுகள், அதனை சரிசெய்யும் வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க முடியாது. எனவே, அம்மாநிலத்தின் அரசே, அம்மாநில கல்வி வாரியம் மற்றும் இதர கல்வி வாரியங்கள் அதன் தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தன் மாநில மாணவர்களுக்கான சமதளத்தை உருவாக்கித் தர தக்க சட்டத்தை இயற்றிக் கொள்ள முடியும் ” என்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏன் புறந்தள்ளப்பட்டது?**

15) நீட் தவிர மற்ற எல்லா உயர் கல்வி நிறுவன சேர்க்கைக்கும் மாநில தேர்வு வாரிய மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே மாநில தேர்வு வாரியம் மற்றும் நீட் ஆகிய தேர்வுகளுக்கும் இரண்டு விதமான தயாரிப்புகளில் ஒரே மாணவன் இறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இரண்டு குதிரைகளில் ஒரே நபர் ஒரே சமயத்தில் பயணம் செய்ய இயலுமா? அப்படி பயணிக்க முடியாத போது நீட் தேர்வில் முழுக் கவனமும் செலுத்த இயலாத சூழ்நிலையில் உள்ளவர்களை நீட் தேர்வில் சோபிக்கவில்லை என்று களங்கம் கற்பிப்பது அறிவுடைமை ஆகுமா?

16 )2017 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை மசோதா மீது அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்த **அதிமுக மக்களவை உறுப்பினர் மருத்துவர் கே.காமராஜ் நீட் தேர்வுக்கு எதிரான தெளிவான நிலைபாட்டை முன் வைத்து பேசியுள்ளார். இந்த கட்டுரையில் முன் வைத்துள்ள பல அம்சங்களுக்கு ஆதரவாக பேசி, விவாதித்து, நிலைக் குழு தன் கருத்துக்களை ஏற்க மறுத்த நிலையில் தன் கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்து விட்டு அதில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசிய கருத்துக்கள், அவரது சொந்த கருத்தா அல்லது அதிமுக கட்சியின் கருத்தா?** அது அக்கட்சியின் நிலைப்பாடு எனில், அடுத்த கட்ட செயல்பாட்டுக்கு ஏன் நகரவில்லை? அக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டே அதனை சாகடித்ததை கண்டும் காணாது இருந்த மர்மம் என்ன?

17) மொத்தத்தில் நீட் கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் ஆதாரங்களை மத்திய அரசோ உச்ச நீதிமன்றமோ பட்டியலிட முடியுமா?

இந்த கேள்விக்கான விடைகள் கிடைக்கும் வரை அல்லது நீட் தேர்வை அகற்றும் வரை நீட் தேர்வால் பாதிக்கப்படுவோரும், அவர்களுக்கு ஆதரவாக நிற்போரும், அவர்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடித் தான் ஆக வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

பேராசிரியர் நா. மணி, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். நீட் தேர்வு: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. ஏன்? என்ற தொகுப்பு நூலின் ஆசிரியர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share