நீட் விலக்கு… அடுத்து என்ன? உதயநிதியை சொல்ல வைத்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 9) அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். MK Stalin conduct all party

நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர். அதிமுக, பாஜக இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

ADVERTISEMENT

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,

“மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பது தான் நீட் தேர்வின் அநீதி.

ADVERTISEMENT

இதற்கு எதிராக மக்கள் மன்றத்தில் நாம் தொடர்ந்து போராடினோம். ஆட்சி பொறுப்பேற்ற 2021-ஆம் ஆண்டு முதல் சட்டப்போராட்டத்தை நடத்தினோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தோம்.

சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவுகளுக்கு பெரும் இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் நீட் தேர்வு இருப்பதாக இந்த குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

13.09.2021 அன்று நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை சட்டமன்றத்தில் முன் மொழிந்தேன். அந்த சட்ட முன் வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், ஆளுநர் அரசியல் கடமையை செய்யாமல் அரசியல் செய்தார். இந்தநிலையில், 1.02.2022 அன்று அந்த சட்டத்தை திருப்பி அனுப்பினார்.

உடனடியாக 5.02.2022 அன்று இதே போல சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி ஆளுநருக்கு சட்டத்தை மீண்டும் அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. 8.2.2022 அன்று இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.

நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ தங்களின் சுய நலனுக்காக ஒன்றிய அரசை தவறாக வழிநடத்தும் தேர்வு இது.

அதுவும் முறையாக நடத்தாததால் பல மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருகிறது. நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை எனக்கு அளித்திருக்கிறது. நமது சட்டப்போராட்டடத்தை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தினால் நாம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

அந்த வகையில், நீட் தேர்வை எதிர்த்து கடந்த ஜூலை 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினை தீவிரமாக முன்னெடுத்து செல்வது, நமது சட்ட முன் வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து தேவைப்படின் புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்வதென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். MK Stalin conduct all party

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share