NEET: நாட்டை உலுக்கும் ’நீட் மோசடி’: பியூட்டி பார்லர் முதல் பேராசிரியர் வீடு வரை.. குடும்பமாக சிக்கிய கும்பல்- எப்படி நடந்தது? அதிர்ச்சி தகவல்கள்!

By Mathi

|

Published on 18 May 2026, 2:34 PM

NEET Fraud Cheating

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு மோசடிகள் மற்றும் சிபிஐ-ன் (CBI) கைது நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு மே 3- ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

ADVERTISEMENT

ஆனால் நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மே 3-ந் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்கவும் உத்தரவிட்டது. அத்துடன் நீட் மறு நுழைவுத் தேர்வு ஜூன் 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ ஒவ்வொரு நாளும் அதிரடியான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

நீட் மோசடி- சிபிஐ பிடியில் சிக்கியவர்கள் (NEET)

பிவி குல்கர்னி: நீட் மோசடியின் பின்னணியில் இருந்த மிக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறவர் ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தேசிய தேர்வு முகமையின் (NTA) வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் தனது புனே இல்லத்தில் சில மாணவர்களுக்கு ரகசிய வகுப்புகள் எடுத்து, இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்படவிருந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடைகளை அப்படியே எழுதிக் கொடுத்துள்ளார். மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், ஒரிஜினல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போயுள்ளது சிபிஐ விசாரணையில் அம்பலமானது.

ADVERTISEMENT

நீட் வினாத்தாளை மோசடியாக பெற்று அதனைப் பிற மாநிலங்களுக்குப் பல லட்ச ரூபாய்க்கு விற்ற நெட்வொர்க்கைச் சேர்ந்த முக்கிய நபர்களையும் சிபிஐ கைது செய்துள்ளது:

மனிஷா வாக்மரே: புனேயில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், வினாத்தாள் மோசடிக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனஞ்சய் லோகண்டே: அகமதுநகரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான இவர், புனேயில் இருந்து வினாத்தாளின் ஹார்ட் காப்பியைப் பெற்று நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.

சுபம் கைர்னார் (நாசிக்): இவர் அந்த வினாத்தாளைப் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ் என்பவருக்கு அனுப்பியுள்ளார். இந்த டிஜிட்டல் காப்பி பின்னர் பல மாநிலங்களுக்குப் பரவியுள்ளது.

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது

இந்த வினாத்தாள் கசிவு சங்கிலித் தொடரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த (ஜம்வா ராம்கர்) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

  • மங்கிலால் பிவால்
  • விகாஸ் பிவால் (மங்கிலாலின் மகன்)
  • தினேஷ் பிவால் (மங்கிலாலின் சகோதரர்)

இந்த பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகள் ஏற்கனவே கடந்த ஆண்டு (2025) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டும் முறைகேடாக வினாத்தாளைப் பெற்று தங்களது உறவினர்களுக்கு வழங்கியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது 2025ஆம் ஆண்டு தேர்ச்சியும் இப்போது சிபிஐ சந்தேக வளையத்திற்குள் வந்துள்ளது.

ரூ30 லட்சம் முதல் ரூ50 லட்சம் வரை..

நீட் வினாத்தாள்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

மோசடி நடந்தது எப்படி?

புனே, நாசிக், குருகிராம் வழியாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு கோச்சிங் சென்டர் நெட்வொர்க்குகளுக்கு வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் கூரியர் மூலமாக வினாத்தாள் கடத்தப்பட்டுள்ளது.

மோசடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

ராஜஸ்தான் சிகார் (Sikar) பகுதியில் உள்ள ஒரு கோச்சிங் சென்டர் ஆசிரியர், தேர்வு நடப்பதற்கு முன்பே கொடுத்திருந்த “கெஸ் பேப்பர்” (Guess Paper) அப்படியே ஒரிஜினல் நீட் வினாத் தாளுடன் ஒத்துப் போவதைக் கண்டு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதன் மூலமே இந்த பயங்கர மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் 5 பேரை டெல்லி நீதிமன்றம் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் யாருக்கேனும் இதில் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

நீட் மோசடிக்கு காரணமான பேராசிரியை

நீட் தேர்வு வினாத்தாள் மோசடி வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர் பேராசிரியை மனிஷா குருநாத் மந்தாரே (Manisha Gurunath Mandhare). இந்த மோசடியின் மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுகிறவர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மாடர்ன் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் மூத்த தாவரவியல் (Botany) பேராசிரியை ஆவார்.

தேசிய தேர்வு முகமை (NTA) இவரை நீட் வினாத்தாள் தயாரிக்கும் வல்லுநர் குழுவில் (Paper-setting committee) நியமித்திருந்தது. இதனால் இவருக்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் (Botany & Zoology) வினாத்தாள்களை அணுகும் முழு அதிகாரம் இருந்தது.

தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு ரகசிய வகுப்புகள் எடுத்து, வினாக்களையும் அதற்கான விடைகளையும் எழுத வைத்துள்ளார். தேர்வு முடிந்த பின், அந்த வினாத்தாள்களை அழித்து ஆதாரங்களை மறைத்துள்ளார். டெல்லி சிபிஐ தலைமையகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட இவர், தற்போது கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

விசாரணை நிலவரம் என்ன?

சிபிஐ விசாரணையின்படி, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகாமையில் இருந்துதான் வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியாகியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ விசாரணை விவரங்கள்

எந்த பாடம்?குற்றவாளிகள்கைப்பற்றப்பட்ட தகவல்கள்
வேதியியல் (Chemistry)பேராசிரியர் பி.வி. குல்கர்னிவேதியியல் பாடப்பிரிவின் வினாக்கள் கசிந்துள்ளன.
உயிரியல் (Biology – Botany & Zoology)பேராசிரியை மனிஷா மந்தாரேகைப்பற்றப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின்படி, சுமார் 90 கேள்விகள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் பி.வி. குல்கர்னி மூலமாக வேதியியல் (Chemistry) வினாத்தாளும்,
  • பேராசிரியை மனிஷா மந்தாரே மூலமாக உயிரியல் (Biology – Botany & Zoology) வினாத்தாளும் கசிந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின்படி, உயிரியலில் மட்டும் சுமார் 90 கேள்விகள் அப்படியே ஒரிஜினல் தேர்வுத் தாளுடன் ஒத்துப் போயுள்ளன. தற்போது இயற்பியல் (Physics) வினாத்தாளைக் கசியவிட்ட 3-வது நபர் யார் என்று சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel