கோடை மழை: பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு!

Published On:

| By admin

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் பதநீர் இறக்கும் தொழிலாளிகள் கவலையடைந்துள்ளனர்.
மீன்பிடித்தொழில் மற்றும் உப்பு உற்பத்தி தொழில் தீவிரமாக நடந்துவரும் அதிராம்பட்டினம் பகுதியைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலும் பதநீர் இறக்கும் தொழில் தீவிரமாக நடைபெறும். இந்த ஆண்டும் பதநீர் இறக்கும் தொழில் மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பதநீர் இறக்கும் தொழிலாளி ஒருவர், “அதிராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பதநீர் உற்பத்தி செய்யும் சீசன் பங்குனி தொடங்கி சித்திரை மாதம் வரையிலும் இருக்கும். தற்போது சீசன் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கோடை மழையால் பதநீர் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்கள் மீது ஏறி நன்கு வளர்ந்து நிற்கும் பாலை பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண்பாண்ட கலயத்தை பனை மரத்தில் கட்டி தொங்க விட்டு விடுவோம். கலயத்துக்குள் விடப்பட்டுள்ள பாலைக்கு அருகில் வளர்ந்து நிற்கும் பனை ஓலைகளை வெட்டிவிடுவோம். ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த கலயம் கட்டி விடப்பட்டுள்ள பனை மரத்தின் பாலையை வெட்டி சீவி விடுவோம். ஒருநாள் கழித்து பனை மரத்தில் ஏறி கலயத்தில் சேர்ந்திருக்கும் பதநீரை சேகரித்து அதை விற்பனை செய்வோம். ஆனால், தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பதநீர் இறக்கும் கலயத்தில் மழைநீர் சேர்ந்து விடுவதால் பதநீர் இறக்கும் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது” என்று கவலையுடன் கூறியுள்ளார்.

**-ராஜ்-**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share