நிரவ் மோடிக்கு தயாராக இருக்கும் சிறப்பு அறை!

Published On:

| By Balaji

லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள நிரவ் மோடியை அடைக்க மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக இருக்கிறது என சிறைத்துறை அதிகாரி கூறினார்.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து முறைகேடாக வாங்கிய கடிதத்தைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ரூ.14,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால், அந்தக் கடனை திருப்பி செலுத்தவில்லை.

ADVERTISEMENT

பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லண்டனுக்குத் தப்பிச் சென்றார். எனினும் இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. எனவே அவர் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நிரவ் மோடி இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டால் அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அதற்காக அவருக்கு அங்கு சிறப்பு சிறை அறை தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிரவ் மோடி மும்பை கொண்டு வரப்பட்டால் ஆர்தா் ரோடு சிறையில்தான் அடைக்கப்படுவார். அவருக்காக அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட 12ஆம் எண் வளாகத்தில் மூன்று சிறை அறைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் ஒன்றில் அவர் அடைக்கப்படுவார். அவர் எப்போது நாடு கடத்தப்பட்டாலும் ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆர்தர் ரோடு சிறையில் நிரவ் மோடிக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்த தகவலை மத்திய அரசு ஏற்கனவே மகாராஷ்டிரா சிறைத்துறையிடம் கேட்டு இருந்தது. இது தொடர்பாக மாநில அரசு வழங்கிய தகவலின் அடிப்படையில், நிரவ் மோடிக்கு 3 சதுர மீட்டர் சுற்றளவில் சிறையில் இடம் ஒதுக்கப்படலாம். படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை ஆகியவை வழங்கப்படும். இதேபோல சிறையில் தேவையான வெளிச்சம், காற்றோட்ட வசதி போன்றவை இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே, நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடி 14 நாட்களுக்குள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா – இங்கிலாந்து இடையிலான நாடு கடத்தும் ஒப்பந்தப்படி, குற்றவாளியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு. அவர் இரண்டு மாதங்களுக்குள் முடிவு எடுப்பார் என்பது தெரிகிறது.

** – ராஜ்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share