இந்திய தடகள கூட்டமைப்பு நடத்தும் 2024 ஃபெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல இளம் இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2022 டைமோண்ட் லீக்கில் தங்கம், 2023 டைமோண்ட் லீக்கில் வெள்ளி, 2022 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2023 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2022 ஆசிய போட்டிகளில் தங்கம் என கடந்த சில ஆண்டுகால சர்வதேச தொடர்களில் பதக்கங்களை குவித்துவரும் நீரஜ் சோப்ரா, இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்றார்.
இந்திய அளவில் நடைபெறும் தொடரில், கடந்த 3 ஆண்டுகளில் நீரஜ் சோப்ரா பங்குபெறும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் விளையாட்டு பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று (மே 15) நடைபெற்றது.
இப்போட்டியில், தனது முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 82 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த டி.பி.மனு 82.06 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து துவக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து 3 சுற்றுகளுக்கு டி.பி.மனு முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட நிலையில், நீரஜ் சோப்ரா தனது 4வது வாய்ப்பில் 82.27 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார்.
பின், தனக்கு மீதம் வழங்கப்பட்ட வாய்ப்புகளில் டி.பி.மனுவால் இந்த இலக்கை கடக்க முடியாத நிலையில், இப்போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டி.பி.மனு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர்களை தொடர்ந்து, 78.39 மீ தொலைவிற்கு ஈட்டியை எரிந்து உத்தம் பட்டில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, நீரஜ் சோப்ராவுடன் இந்தியாவிற்காக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற கிஷோர் ஜனா இப்போட்டியில் 5வது இடத்தையே பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் அதிகபட்சமாக 75.49 மீ தொலைவிற்கு தான் ஈட்டியை எறிந்திருந்தார்.
2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில், கிஷோர் ஜனா 87.54 மீ தொலைவிற்கு ஈட்டியை எரிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை!
கோவை: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… விபத்தில் பறிபோன உயிர்!