மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். need tamil teacherin kendra vidyalaya
இதற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே இருக்கும் என்றும், மும்மொழி கொள்கை தேவையில்லை என இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மத்திய அரசின் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என திமுக எம்.எல்.ஏ எழிலன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட இந்த தகவல் மூலம் தமிழக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், தாய்மொழி தமிழை கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் கூட அந்த பள்ளிகளில் இல்லை. அதேவேளையில், மிகவும் சொற்பமான நபர்கள் மட்டுமே பேசுவதாக ஆய்வறிக்கைகள் கூறும் சமஸ்கிருதம் மொழியை பயிற்றுவிக்க 15 ஆசிரியர்களும், இந்தி மொழியை பயிற்றுவிக்க 52 ஆசிரியர்களும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் உள்ளன என்பது உறுதியானது.
இது மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு ஒரு உதாரணம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நேரடி நேர்காணல் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சிவகங்கை, இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.