பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று ஜனவரி 23-ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி, தமாகா, அமமுக உட்பட 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்னையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார்.
இதனையடுத்து செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
கேரளாவில் இருந்து இன்று பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுராந்தகம் சென்று பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களது கட்சி சின்னங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
