என்.டி.ஏ கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோரைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
என்ற குறளை குறிப்பிட்டு, உரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே கையில் அடக்கலாம் என்பது இதன் பொருள்.
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் உரிய காலத்தில் உரிய இடத்தில் உரியவர்களோடு ஒன்றிணைந்து உறுதியாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் ஊழல் மட்டுமே அதிகரித்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் மலிந்துவிட்டன. மக்களை வாட்டி வதைக்கு அரசாங்கம் தேவையா?
ஒரு குடும்பம் வாழ்வதற்காக 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இன்றைக்கு தமிழகத்தை கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் செய்த சாதனை ஒன்றே ஒன்று. ஊழல்… ஊழல் ஊழல்… இன்று அவரது குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக இருக்கிறது. எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சராக்கியிருக்கிறார்.
இனி எப்போதும் அந்த குடும்பம் ஆட்சிக்கு வர முடியாது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். தேஜகூ சக்தியால் இந்த ஆட்சியை வீழ்த்துவோம். பிரதமர் நமக்கு உறுதுணையாக இருக்கிறார்.
2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். ” என்றார்.
“மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்ய வில்லை என்று ஸ்டாலின் சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் மத்தியிலிருந்து பல திட்டங்களை பெற்றோம். கேட்ட நிதிகளை கொடுத்தார்கள். அதிகமாக ரயில்வே பாலங்களை கொடுத்தார்கள். தேசிய நெடுஞ்சாலைகள வழங்கினார்கள். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டப்பட்டது. இப்படி மத்திய அரசு தமிழகத்திற்குப் பல திட்டங்களைக் கொடுத்துள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கியது பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை.
சுமார் 14,000 கோடி மதிப்பிலான காவிரி நதி சுத்திகரிப்புத் திட்டத்திற்கு பிரதமர் அனுமதி வழங்கினார், ஆனால் திமுக அரசு அரசியல் காரணங்களுக்காக அதை முடக்கி வைத்துள்ளது.
உலகமே திணறிய கொரோனா காலத்தில், தடுப்பூசி மற்றும் மருந்துகளை கொடுத்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியவர் பிரதமர் மோடி.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை இந்த வலுவான கூட்டணி நிறைவேற்றும். பை… பை… ஸ்டாலின்” என்று கூறினார்.
