நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் அவதூறு… டிஜிபிக்கு நோட்டீஸ்!

Published On:

| By Selvam

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசிய விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 17-ஆம் தேதி சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவிஞர் இனியவன், தேர்தலில் போட்டியிடாமல் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்து வருகிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசினார்,

கவிஞர் இனியவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்ததார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “பாஜகவின் பெண் தலைவர்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறி பிழைப்பு நடத்துபவர்களுக்கு மேடை கொடுப்பதை திமுக வழக்கமாக வைத்துள்ளது.

இந்த மோசமான அணுகுமுறையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்தால் எந்த எல்லைக்கும் சென்று அவர்களை கைது செய்கிறார்கள். ஆனால், இதுபோன்று பெண் தலைவர்களை இழிவாக பேசுவர்களை கைது செய்ய மாட்டார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக போலீஸ் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கவிஞர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்த, இனியவன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: விழிப்புணர்வு தேவை… பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல் ஆறுதல்!

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share