திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்றும், இன்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாஜகவினரும், இந்து முன்னணியினரும் குவிந்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் மலை ஏற அனுமதிக்கவில்லை. தீபம் ஏற்ற போலீசார் முழு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த போதும், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறி போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்தசூழலில் திருப்பரங்குன்றத்துக்கு நயினார் நாகேந்திரன் வருகைத் தந்தார். போலீசார் தடுப்பையும் மீறி எச்.ராஜாவும் வந்தடைந்தார்.
இந்நிலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி மலை அடிவாரத்தில் பாஜகவினரும் இந்து முன்னணியினரும் வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மனுதாரரையாவது அனுமதியுங்கள் என்று கேட்டனர்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவுடன் நயினார் நாகேந்திரனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தசூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து செல்ல முற்பட்டனர். அந்த பேருந்தை மறித்து பாஜகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
மலைப்பாதையில் மனுதாரார் ராம ரவிக்குமார் காத்திருக்கிறார். காவல்துறை ஆணையர் வருவார்… எங்களை மலை ஏற அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக தீபம் ஏற்ற அனுமதி மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
