அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ராக்காயி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. டிரஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மூவி வெர்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று(நவ.18) நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில், ஒரு குழந்தையை பெரும் கூட்டத்திடம் இருந்து பாதுகாக்கும் வீரத்தாய் கதாபாத்திரத்தில் நயந்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது. கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு வேலைகளை மேற்கொள்ளவுள்ளார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
சண்டை காட்சிகளை ’ஸ்டன்னர்’ சாம் அமைக்கவுள்ளார். ஒலிப்பதிவை சுரேன் செய்யவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாகும்.
நயன்தாரா தற்போது கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ’டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் – 2’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா