நடிகை நயன்தாரா பட ப்ரமோஷன்களில் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல் என்பது சமூக சேவை. ஒரு அரசியல்வாதி ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரதிநிதியாக இருப்பார் என்றுதான். அவருடைய வேலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான். அதனால் அது வியாபாரம் கிடையாது. மக்கள் சேவை.
அந்த வகையில் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். இதில் புதிதாக ஒன்றும் கிடையாது. அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதில் தப்பு கிடையாது.

இது ஜனநாயக நாடு. யார்வேண்டுமானாலும் வரலாம். எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள்” என்றார்.
அப்போது அவரிடம் நடிகைகள் ஒரு சிலர் பட ப்ரோமஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், ”நயன்தாரா அவர் நடிக்கும் பட ப்ரோமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று யாரையும் கட்டாயபடுத்த முடியாது.
எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லும் போது நாம் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடிகைகள் பங்கேற்க வேண்டும் என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
