எப்படி இருக்கிறார் 38 வயதான ‘நாயகன் 2025’?- விமர்சனம்!

Published On:

| By Minnambalam Desk

நாயகன் படத்தின் கதை என்னவென்று தெரியாத யாரும் இதைப் படிக்கப் போவதில்லை.

எனவே கதைக்குப் பதில் நாயகன் உருவாக்கத்தில் நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.

ADVERTISEMENT

1972 வெளிவந்த The Godfather என்ற அமெரிக்க கேங்ஸ்டர் படத்தின் கதையை சிவாஜியை வைத்து எடுக்க விரும்பிய முக்தா சீனிவாசன், சிவாஜியிடம் சொல்ல சிவாஜியும் ஓகே சொன்னார். அந்தப் படத்தில் கமல்ஹாசனும் அமலாவும் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் கமலின் வெல்விஷர் அனந்து, அதில் சிவாஜிக்குதான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லி கமல்ஹாசனை நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்.

மணிரத்னம் தனது முதல் படமும் கன்னடப் படமுமான ‘பல்லவி அனு பல்லவி’யில் கமலை நடிக்க வைக்க முயன்றும் முடியவில்லை.

ADVERTISEMENT

ஒரு நிலையில் முக்தா சீனிவாசனிடம் கமல் மணிரத்னம் பற்றி சொல்ல, முக்தா சீனிவாசனிடம் மணிரத்னம் இரண்டு கதைகள் சொன்னார். Dirty Harry என்ற அமெரிக்க ஆக்ஷன் திரில்லர் படமும் Beverly Hills Cop என்ற அமெரிக்க ஆக்ஷன் காமெடி படம் இரண்டும் இணைந்தது போல ஒரு கதை.

இன்னொன்று மும்பையைக் கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துச் சொன்ன கதை. முன்பே ஆர் சி பிரகாஷ் என்ற புரடியூசருக்கு மணிரத்னம் சொல்லி நிராகரிக்கப்பட்ட கதைதான் வரதராஜ முதலியார் கதை . ஆனால் முக்தாவுக்கும் அது பிடிக்க, நாயகன் கருவானது .

ADVERTISEMENT

மணிரத்னமும் பிசி ஸ்ரீராமும் சென்னையின் சாலைகளில் சைக்கிள் ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டே இந்தப் படத்தின் காட்சிகளைப் பேசி இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் சம்பளம் 17 லட்சத்து 50000. வயதான வேலு நாயக்கருக்கு சலங்கை ஒலி மாதிரி ஒரு கெட்டப் போடலாம் என்று கமல்ஹாசன் சொல்ல, வேண்டாம் என்று மணிரத்னம் உருவாக்கியதுதான் படத்தில் வரும் கெட்டப்கள்.

சரண்யாவின் அப்பாவுக்கு, மகள் படத்தில் நடிப்பது பிடிக்கவே இல்லை. சரண்யாவும் அவர் அம்மாவும் சம்மதிக்க வைத்தார்கள்.

வேலுநாயக்கர் மகளாக நடிக்க முதலில் பேசப்பட்டது கமலின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுஹாசினியே. ஆனால் மணிரத்னம் அதை விரும்பவில்லை. எனவே கார்த்திகா வந்தார் . அப்போது மணிரத்னத்துக்கும் சுஹாசினிக்கும் கல்யாணம் ஆகவில்லை. ஆகி இருந்தால் கார்த்திகா நடித்து இருக்க முடியாது.

நாசர் கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்டவர் ரகுவரன். ஆனால் அவர் போலீஸ் கட்டிங் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் நாசருக்கு அது அமைந்தது. அப்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்த தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடிக்க உடனே ஒத்துக் கொண்டார்.

வேலு நாயக்கரை சுட்டுக் கொல்லும் கதாபாத்திரத்துக்கு டினு ஆனந்த்தைக் கேட்க, அவர் ”நான் டைரக்டர் ஆகவே ஆசைப்படுகிறேன்” என்று மறுக்க, மணிரத்னம் வற்புறுத்தி ஒத்துக் கொள்ள வைத்தார்.

ஒரு காட்சியில் கமல் ஒரு முகபாவனையைக் கொடுக்க, உடனே மணிரத்னம், ” நீங்க கொடுத்தது வெஸ்டர்ன் சினிமா முகபாவனை. எனக்கு அது வேண்டாம். நம்மூர் மனிதர்களின் முகபாவனை வேண்டும்” என்று கூற, அந்த ஒரு வாசகம் பின்னர் கமல்ஹாசன் கூடவே வந்தது.

அறுபது நாட்கள்… எழுபது பிலிம் ரோல்கள்… அறுபது லட்ச ரூபாய்க்கு படத்தை முடிப்பதுதான் பிளான். ஆனால் ஒரு கோடி வரை போனது .

படம் பதினைந்து நாள் மும்பை தாராவியிலும் , பின்னர் ஆழ்வார்பேட்டை வீனஸ் ஸ்டுடியோவில் செட் போட்டும் எடுக்கப்பட்டன.

ஆக்ஷன் காட்சிகளுக்கான பட்ஜெட் பனிரெண்டு லட்சம். ஷோலே இந்திப் படத்தின் சண்டை இயக்குனர் வரவழைக்கப்பட , அவர் கேட்ட சம்பளம் காரணமாக மூன்றே நாட்களில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். படத்தின் சில காட்சிகளில் கமலின் சொந்தத் துப்பாக்கி நடித்திருக்கிறது. விபச்சார விடுதியில் படிக்க ஆசைப்படுவதாக சொல்லும் ஹீரோயின் காட்சி முக்தா சீனிவாசன் சொன்னது .

சிறுவயது வேலுவின் காட்சிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒன்றரை நாட்களில் எடுக்கப்பட்டது.

இப்போது அண்ணா சாலையில் இருக்கும் தாஜ் கிளப், முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங் என்று இருந்தது. அங்கேதான் ”நான் சிரித்தால் தீபாவளி…” பாடல் எடுக்கப்பட்டது.

படத்தின் நீளம் மூன்று மணி நேரத்துக்கு மேல். அப்படியே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கமலும் மணிரத்னமும் சொல்ல, மறுத்த முக்தா சீனிவாசன் எடிட்டர் லெனினிடம் படத்தைக் குறைக்கச் சொன்னார் .

“அப்படி குறைத்ததும் இளையராஜாவின் தென்பாண்டிச் சீமையிலே பாட்டும் அந்த மெட்டில் வரும் தீம் மியூசிக்கும் தான் படத்தின் வெற்றிக்குக் காரணம் “என்றார் முக்தா சீனிவாசன்.

வேலு நாயக்கர் ரெட்டி சகோதரர்களைக் கொல்வது, மகனின் மரணம், அவன் உடல் பார்த்து நாயக்கர் கதறுவது, போலீஸ் எஸ்பி வந்து தன் மகளைக் கற்பழித்த அமைச்சர் மகனைக் கொல்லச் சொல்வது எல்லாம் The Godfather படத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.

கடலுக்குள் போதைப் பொருளை உப்பு மூட்டையில் கட்டி தண்ணீரில் போட்டு பிறகு உப்பு கரைந்து மேலே வரும் உத்தி Once Upon a Time in America என்ற படத்தினுடையது.

இளையராஜாவின் நானூறாவது படம் நாயகன். நிலா அது வானத்து மேலே பாடல் இளையராஜா எழுதியது.காவியமான ”தென் பாண்டிச் சீமையிலே…” பாடல் முதல் கொண்டு மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் .

வாழும் மனிதரைப் பற்றிய படம் என்பதால் திரையிடக் கூடாது என்கிறது தணிக்கைத் துறை. மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு முக்தா சீனிவாசன் போக, அவர்கள் வரதராஜ முதலியாரிடம் இருந்து சம்மதக் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள் .

உடனே கொடுத்தார் வரதராஜ முதலியார்.

தமிழகத்தில் இருநூறு நாட்கள் ஓடிய நாயகன் தமிழிலேயே ஆந்திரா கர்நாடகாவில் நூறு நாள் ஓடியது . பின்னர் நாயகுடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட அதுவும் நூறு நாள்.

டைம்ஸ் அமெரிக்க இதழின் ‘எக்காலத்திலும் சிறந்த நூறு படங்கள் ‘பட்டியலில் The Godfather படமும் இருக்கிறது. நாயகன் படமும் இருக்கிறது. The Godfather பாணியில் ஓர் அற்புதமான கேங்க்ஸ்டர் காவியம் நாயகன் ” என்று பாராட்டியது அந்தப் பத்திரிக்கை.

இங்கிலாந்து பத்திரிக்கையாளர் Phil Hardy தனது பிரிட்டிஷ் ஃபிலிம் கம்பானியன் என்ற நூலில், ” The Godfather படத்தை அடுத்து வந்த படங்களில் நாயகன்தான் சுவாரஸ்யமானது” என்கிறார்

‘ நாயகன் 2025’ எப்படி இருக்கு?

படம் வந்த போது இருந்த அதே 35 MM படமாகவே நாயகனைப் பொலிவு கூட்டி வெளியிட்டிருந்தால்தான் படத்தின் அழகான ஃபிரேம்களை ரசிக்க முடியும்.. உணர முடியும். இன்றைய ஆடியன்சுக்கு அந்த திரை அனுபவம் பிரம்மிப்பானதாக இருந்திருக்கும்.

ஆனால் சினிமாஸ்கோப் ஆக்கியதால் படத்தின் அற்புதமான காட்சித் தோற்றங்களில் தலையோ காலோ வெட்டப்பட்டது போல இருப்பது வேதனை.

முக்கியமாக மகன் மரணத்தில் நாயக்கர் அழும் காட்சி, மகளோடு வீட்டில் சண்டை போடும் காட்சி ஆகியவை அந்தப் பின்புலத்தின் வலுவை இழந்து நிற்கிறது .

பாடகர்கள் வரிசையில் கமல்ஹாசன் பெயரைக் கமலகாசன் என்று போட்டு இருக்கிறார்கள் .

தென் பாண்டிச் சீமையிலே பாட்டுக்கான ஆலாபனையை இளையராஜாவின் காந்தக் குரல் துவங்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை இன்றும நாளையும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல , இசையமைப்பாளர்களுக்கும் ஒரு மாஸ்டர் கிளாஸ் . தான் ஒரு மேஸ்ட்ரோ என்று ராஜா அப்போதே நிரூபித்து இருக்கிறார். புரிந்து கொள்ள நமக்குத்தான் பல வருடங்கள் ஆனது .

” நாங்கள்தான் திரைப்பட விமர்சனத்தின் மாஸ்டர் ” என்று கூறிக் கொண்டிருந்த ஒரு பிரபல வார இதழ், தனது விமர்சனத்தில் கமல், மணிரத்தனம் ஸ்ரீராமை மட்டும் பாராட்டிவிட்டு, ‘இளையராஜாவின் நானூறாவது படமாம் . டைட்டிலில் மட்டும்தான் தெரிகிறது’ என்று அபத்தமாக வன்மமாக விமர்சனம் எழுதியதை நினைத்து இப்போதும் கோபம் வருகிறது

கமல்ஹாசனின் நடிப்பை இன்னும் வியந்து பார்க்க முடிகிறது. சிறு சிறு முகபாவனைகள் கூட இப்போதும் பிரம்மிக்க வைக்கிறது

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு இன்னும் படித்து முடிக்கப்படாத கவிதை போலவே இருக்கிறது. ஃபிலிமில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆழமான பின்புல வித்தியாசத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன . ஃபிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு காட்சியின் அழகியல் எப்படி நாசமாகப் போயிருக்கிறது என்று தெரிகிறது.

மணிரத்னம் மேக்கிங் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது . பாலகுமாரனின் வசனங்கள் ஒரு சில காட்சிகள் தவிர (பச்சைப் புள்ளையை அடிக்கிறாங்களாம் அடிக்கிறாங்க .. இப்படி ஒரு சில காட்சிகள் தவிர) படத்துக்கு புது பரிமாணம் தருகின்றன .

இந்த மணிரத்னமும் இதே கமல்ஹாசனும் சேர்ந்துதான் ‘தக் லைஃப்’ படத்தை எடுத்தார்களா? இல்லை அவர்களின் குளோனிங் ஆ என்று சந்தேகம் வருகிறது

நாயகனை இப்போது பெரிய திரையில் பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் .

பலமுறை பார்த்த படம் . எனினும் இப்போது பார்க்கும்போதும் ‘இப்பதான் படம் ஆரம்பிச்சது; அதற்குள் இன்டர்வல் வந்திருச்சே’ என்று தோன்றுகிறது . படம் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் படம் ஓடக் கூடாதா என்று ஏக்கம் வருகிறது

தவற விட்டு விடாதீர்கள்

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share