துரித உணவு மோகத்தில் அதைத் தேடி அலைபவர்கள் கொஞ்சம் நம்முடைய பாரம்பர்ய உணவுகளின்மீது கவனம் செலுத்தலாம். அப்படிப்பட்ட நம்நாட்டுப் பண்டங்களை சமைத்து, சுவைத்து மகிழ இந்த நாட்டுக் கதம்ப சாதம் உறுதுணை செய்யும்.
என்ன தேவை?
பச்சரிசி – 200 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு போன்ற நாட்டுக் காய்கள் – 300 கிராம்
வேகவைத்த மொச்சை – 100 கிராம்
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – ஒரு சிறிய துண்டு,
வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி – 2
வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 10 பற்கள்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடலை எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முதலில் ஒரு குக்கரில் பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், துருவிய இஞ்சி, சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு இறக்கவும். பிறகு ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, இதனுடன் நறுக்கிய காய்கறி கலவை, வேகவைத்த மொச்சை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார்த்தூள், சிறிதளவு உப்பு, புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு எடுக்கவும். பிறகு இதை வேகவைத்த பருப்பு சாதத்தில் ஊற்றி கலந்து நன்கு மசித்து, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளிதம் செய்து சேர்த்து இறக்கவும். இதன்மீது கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வெல்லம், நெய் சேர்த்துக் கிளறியெடுத்தால் வீடே கமகமக்கும் நாட்டுக் கதம்ப சாதம் தயார். இதற்கு வற்றல், அப்பளம் பெஸ்ட் சைடிஷ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு
கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்