வக்பு சட்டம் எதிர்ப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசிடம் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். National Conference could learn from Tamil Nadu
வக்பு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கோரி இன்று (ஏப்ரல் 7)கேள்வி நேரத்தை ஒத்திவைக்க தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்கள் என 11 பேர் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதரிடம் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால், இந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். “விதி 56 மற்றும் 58 துணை விதி 7ன் படி, நீதிமன்ற விசாரணையில் உள்ள எந்த ஒரு விஷயம் குறித்தும் விவாதிக்க அவையை ஒத்திவைக்க முடியாது. இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று கூறினார்.
சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், பேப்பர்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பேசிய தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ தன்வீர் சாதிக், “ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலம். இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிப்பது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை. 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு தீர்மானத்தை கொண்டு வந்த போது அதை சபாநாயகர் ஏற்று இந்த பிரச்சனையை பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் ஹபீஸ் லோன் கூறுகையில், “இது அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீறும் செயல்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் வக்பு திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது குறித்து ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சபாநாயகர் வக்பு மசோதா மீதான தீர்மானத்தை நிராகரித்தது ஏமாற்றமளிக்கிறது. வலுவான பெரும்பான்மையை பெற்ற போதிலும் பாஜகவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் முற்றிலும் அடிபணிந்து, இருதரப்பினரையும் திருப்திப்படுத்த இழிவாக முயற்சிப்பது போல் தெரிகிறது.
வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழக அரசிடம் இருந்து தேசிய மாநாட்டு கட்சி கற்றுக்கொள்ள வேண்டும்.
.
ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை நிறைந்த மாநிலம் ஆகும். அவர்களை மையமாகக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு இந்த பிரச்சனையை விவாதிக்க கூட தைரியம் இல்லாதது கவலை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். National Conference could learn from Tamil Nadu