ஒருகாலத்தில் திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் சில தினசரிகள், இதழ்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வந்தன.
தொலைக்காட்சி சேனல்கள் எண்ணிக்கை பெருகியபோது அவற்றின் சார்பில் விருதுகள் தரப்பட்டன. இப்போது யூடியூப் சேனல்கள் மற்றும் இதர சமூகவலைதளங்கள் சார்ந்து விருதுகள் கொடுக்கிற காலம் வந்துவிட்டது. ஆனால், இப்போதும் அரசு சார்பாக வழங்கப்படுகிற தேசிய விருதுகள் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்து வருகின்றன.
சமீபத்தில் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தனக்கும் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, துணை நடிகர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து நடிகை ஊர்வசி விளக்கம் கேட்டு பேட்டிகள் தந்து வருவது தனிக்கதை.
அவரைப் போலவே இன்னொரு நடிகையும் தேசிய விருதுகள் தொடர்பான கருத்தொன்றைத் தெரிவித்திருக்கிறார். அவர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரூபாலி கங்குலி. பெங்காலி நடிகையான இவர் தற்போது டிவி சீரியல்களில் அதிக சம்பளம் பெறும் நடிப்புக் கலைஞராகத் திகழ்கிறார்.
இவர் நடித்துவரும் ‘அனுபமா’ இந்தி சீரியல் தற்போது ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
மும்பையில் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இவர், “சினிமா, ஓடிடி கலைஞர்கள், விமர்சகர்களுக்கு தேசிய விருதுகள் தரப்படுவதைப் போல டிவி ஆர்ட்டிஸ்ட்களுக்கு விருதுகள் தரப்படுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.
“கோவிட் – 19 நோய்த்தொற்று காலத்திலும் கூட நாங்கள் இடைவிடாது நடித்திருக்கிறோம். ஒரு சினிமா நட்சத்திரம் அப்படி இடைவிடாது வேலை செய்தால் அது தலைப்புச் செய்தியாகிறது. நாங்கள் தினமும் காலை 6 மணி மாலை 6 மணி வரை வேலை செய்கிறோம்; யாரும் அது பற்றி பேசுவதில்லை” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
கூடவே, மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.
‘சினிமாவுக்கு கொடுங்க, ஓடிடிக்கு கொடுங்க, அப்படியே இனிமே டிவிக்கும் நேஷனல் அவார்டு தந்தே ஆகணும்’ என்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட வசனத்தின் தொனியில் ரூபாலி பேசியிருக்கும் விஷயம் தொலைக்காட்சி உலகில் இருப்பவர்களை நிச்சயம் மகிழ்ச்சியில் தள்ளும்..!
