நாங்கள் யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அண்ணாமலைக்குப் பதில் அளித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அக் கூட்டணியிலிருந்து விலகியது. Natham Viswanathan Reply to Annamalai
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக தோற்றது என்று அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூறிவந்தனர்.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
அதேசமயம் அதிமுக எங்களுக்கு எதிரி இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 7) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவை நோட்டா கட்சி, தீண்டதகாத கட்சி, பாஜகவுடன் கூட்டணியிலிருந்ததால் தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தவம் கிடக்கிறார்கள்.
அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று அதிமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகப் பேட்டியளித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று இரவு திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “நாங்கள் யாருக்காகவும் தவம் இருக்கவில்லை. அண்ணாமலை எங்கள் கட்சி பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகை கௌதமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினர். Natham Viswanathan Reply to Annamalai
இந்த நிகழ்ச்சியில் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், “இந்த மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்தால் தான் விமோசனம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மாற்றம் தான் தேவை” என்று கூறியுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.