சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து, ஓய்வுபெற்ற தோனிக்கு தேசிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் எனப் பல தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் ஏற்பாடு செய்யப்படும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தோனியை புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதி உங்களுக்கே உரியப் பாணியில் ஓய்வை அறிவித்தீர்கள். உங்களுடைய ஓய்வு 130 கோடி இந்திய மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
நீங்கள் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்தீர்கள். இந்தியாவை உலக தரவரிசையில் முதல் இடத்திற்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தீர்கள். உலகின் சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவராகவும், விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் இருந்துள்ளீர்கள்.
போட்டியின் போது கடினமான சூழ்நிலைகளில் உங்கள் நம்பகத் தன்மை மற்றும் போட்டிகளை முடிக்கும் பாணி, குறிப்பாக 2011 உலகக் கோப்பையை நீங்கள் முடித்த விதம் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து உங்களுக்காக ஒரு பெயரை உருவாக்கியது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். மகேந்திர சிங் தோனி என்ற பெயர் கிரிக்கெட் புள்ளி விவரங்களுக்காக மட்டுமோ அல்லது குறிப்பிட்ட மேட்ச் வின்னிங் பங்களிப்புக்காக மட்டுமோ நினைவில் கொள்ளத்தக்கது அல்ல. உங்களை விளையாட்டு வீரராக மட்டும் பார்ப்பது நியாயமல்ல. உங்களது தாக்கத்தை ஒரு நிகழ்வாகப் பார்ப்பதே சரியானது.
உங்களது உயர்வு மற்றும் நடத்தை உங்களைப் போன்ற கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வலிமை மற்றும் உத்வேகத்தை அளிக்கிறது. புதிய இந்தியாவின் அடையாளமாக நீங்கள் இருந்துள்ளீர்கள். குடும்பப் பெயர்கள் இளைஞர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதில்லை. தங்கள் பெயர்களையும் தங்கள் விதிகளையும் தாங்களே தீர்மானிப்பவர்களாக இந்த தலைமுறை இளைஞர்கள் இருக்கிறார்கள்.
நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்று நமக்குத் தெரியும் பட்சத்தில் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. இந்த உணர்வைத்தான் நீங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளீர்கள். இந்த தலைமுறையினர் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது திறமை மேல் நம்பிக்கை வைத்துச் செயல்படுகின்றனர்.
அந்தவகையில், கடினமான சூழ்நிலைகளில் பல ரிஸ்க்குகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள். அதற்கு 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியே உதாரணம். இந்த தலைமுறை இந்தியர்கள் தீர்க்கமான சூழ்நிலைகளில் பதற்றமடைவதில்லை. இதனை நாங்கள் உங்களது பல இன்னிங்ஸ்களில், ஆட்டங்களில் பார்த்திருக்கிறோம்.
வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் சலனமில்லாமல் நீங்கள் கையாண்டது இளைய தலைமுறைக்கு மிக முக்கியமான பாடம். இந்திய ராணுவத்தில் நீங்கள் சேர்ந்து பணியாற்றியதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். ராணுவ வீரர்களுடன் இருந்த போது நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்தீர்கள். அவர்களின் நலன் குறித்த உங்கள் அக்கறை எப்போதும் பாராட்டுக்குரியது.
இனி சாக்ஷியும் ஸிவாவும் (ziva) உங்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் அவர்களின் தியாகங்களும் ஆதரவும் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. தொழில் ரீதியான வாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்குமான சமநிலையைப் பேணுவதிலும் உங்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள முடியும்.
உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட போட்டியில் வெற்றியைக் கொண்டாடியபோது, உங்கள் அழகான மகளோடு நீங்கள் விளையாடும் படத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது! உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ள தோனி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**
,”