போதைப்பொருள் கடத்தல் வழக்கு : அமீரிடம் ஆறு மணி நேரமாக விசாரணை!

Published On:

| By Kavi

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகத் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியா , நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச்  9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களைத் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் ஜாபர் சாதிக்குடன் இயக்குநர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டனர்.

அந்த வகையில் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 31ஆம் தேதி அமீருக்கு சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ஏற்று இன்று (ஏப்ரல் 2) விசாரணைக்காக வழக்கறிஞர்களுடன் டெல்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்திற்கு இயக்குநர் அமீர் சென்றார்.

இன்று காலை அதிகாரிகள் முன்பு அமீர் ஆஜரான நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையின் போது அவருடன் வழக்கறிஞர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஜாபர் சாதிக் எந்தெந்த வழிகளில் பணத்தைச் செலவழித்தார், அவர் தொடர்ச்சியாகச் சந்திக்கக்கூடிய நபர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டு வருவதாகவும்,

இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில், தேவைப்பட்டால் அமீரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்படும் என்றும் என்.சி.பி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சிதம்பரம்: பாமக வாக்குகளை பங்கு போடும் அதிமுக-திமுக. தனி கணக்கு போடும் திருமா!

டிஜிட்டல் திண்ணை: வெறுங்’கை’ வேட்பாளர்கள்… வெறுப்பில் அமைச்சர்கள்… ஸ்டாலின் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share