நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக ரூ.1 கோடி அளித்த நெப்போலியன்

Published On:

| By christopher

Napoleon donates Rs 1 crore for Nadigar Sanga building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை, நீதிமன்ற வழக்கு காரணமாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் முடங்கி இருந்தது.

பிரச்சினைகள் முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னரும் கட்டிடப் பணிகளை தொடங்க முடியாமல் நிதி நெருக்கடியில் நடிகர் சங்கம் இருந்தது.

கட்டிடப்பணிகள் முழுமை பெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

ஒரு படத்தில் நடிக்க குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் அதிகபட்சம் 150 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில் சுமார் 40 கோடி ரூபாய்க்காக கட்டிடப்பணிகளை தொடர முடியாத நிலையை குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தயாரிப்பாளர், நடிகர், தற்போதைய தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டிடப்பணிக்காக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல் நபராக வழங்கினார்.

அதன் பின் நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய், நடிகர் விஜய் 1 கோடி ரூபாய், நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் வழங்கினர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கி நடிகர் நடிகைகளிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளார்.

2000 ஆம் ஆண்டுகளில் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் தலைவராக இருந்த போது துணை தலைவராக பொறுப்பில் இருந்தவர் நடிகர் நெப்போலியன்.

விஜயகாந்த் அரசியல்கட்சி தொடங்கியபோது நடிகர் சங்க தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போதிருந்து நெப்போலியனும் நடிகர் சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

தனது மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

இனிமேல் தமிழ் சினிமாவில் நடிப்பு தொழிலில் நெப்போலியன் ஈடுபட போவதில்லை என்ற போதிலும் தன்னை துணை தலைவராக அமர வைத்து அழகுபார்த்த நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது, உச்ச நடிகர் நடிகைகளை நாம் என்ன செய்ய போகிறோம் என யோசிக்க வைத்துள்ளது என்கிறார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.

Image

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், 2000 – 2006-ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உதவிதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமானுஜம்

Gold Rate: மக்களே உஷார்… வெயிலும் ஏறுது, தங்கம் விலையும் ஏறுது!

குட் பேட் அக்லி : அஜித்துடன் நடிக்கும் சிம்ரன் & மீனா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share