உதய் பாடகலிங்கம்
ஒரு படத்தின் பெயர், அது தொடர்பான செய்திகள், பணியிட புகைப்படங்கள் என்று எல்லாமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும். அந்த வகையில், ஒரு மலையாளப் படம் தமிழ் பெயரைக் கொண்டிருப்பதோடு தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் படம்பிடிக்கப்பட்டது அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது.
அதே நேரத்தில், அந்த படத்தில் தமிழ் நிலமும் கலாசாரமும் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுந்தது.
லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கத்தில் மம்முட்டி தயாரித்து நடித்திருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ அக்கேள்விக்கு என்ன பதிலைத் தந்திருக்கிறது?
தமிழ் பேசும் மலையாளி!
கேரளாவில் இருந்து ஒரு குழுவினர் வேளாங்கண்ணி செல்கின்றனர். ஊர் திரும்பும் வழியில், ஒரு ஹோட்டலில் அவர்கள் வந்த வாகனம் நிற்கிறது. அவர்களனைவரும் அங்கேயே சாப்பிடுகின்றனர். மீண்டும் வாகனம் கிளம்பும்போது, அனைவரும் நன்றாகத் தூங்கத் தொடங்குகின்றனர். திடீரென்று ஒருவருக்கு மட்டும் தூக்கம் கலைகிறது.
ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்துமாறு சொல்லும் அந்த நபர், வேகமாகக் கீழிறங்கி சாலையை ஒட்டியுள்ள சோளக்காட்டினுள் மறைந்துவிடுகிறார். மனைவி, மகன் தொடங்கி வாகனத்தில் இருக்கும் அனைவரும், அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நேரம் ஆகியும் அவர் வராமல் போகவே, அவரைத் தேடி அருகிலிருக்கும் கிராமத்தினுள் நுழைகின்றனர்.
அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் போல, அந்த நபர் வெகுசகஜமாக எதிரே வருகிறார். சுத்தமான தமிழில் பேசுகிறார்; பாடுகிறார்; ஆடுகிறார்; தமிழ் திரைப்பட வசனங்களை உச்சரிக்கிறார். ஒரு வீட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். இதை ஆச்சர்யம் என்றெண்ணி வியப்பதா அல்லது இன்னாரென்று தெரியாத நபரை வீட்டினுள் அனுமதிப்பதா என்று தயங்குகின்றனர் சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள்.
அதேநேரத்தில், அந்த நபருடன் வந்தவர்கள் அவரை எப்படியாவது தங்களுடன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்பதில் உறுதியாக நிற்கின்றனர். இறுதியில் என்ன நடந்தது என்பதுடன் படம் முடிவடைகிறது.
இந்த கதையில் மலையாள மொழி மீதும், அதன் கலாசாரம் மீதும் பெருமிதம் கொண்டவராக வருகிறார் அந்த நபர். மலையாளியான அவர் திடீரென்று சகஜமாகத் தமிழ் பேசுவதே, கதையில் அமானுஷ்யத்தை உருவாக்குகிறது. அங்கிருப்பவர்களின் பெயர்களையும் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் விவரிக்கையில் அது உச்சம் தொடுகிறது.

எளிமையும் சிக்கலும்!
கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று வெளியானது இத்திரைப்படம். அதற்கு முன்பே, கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது பெரும் வரவேற்பை அள்ளியது.
இப்படியொரு கதையைத் திரையில் ஆக்கம் செய்வதென்பது சிக்கலான விஷயம். வெகு இயல்பான திரைமொழியுடன் அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரி.
படத்தைப் பார்த்துவிட்டு, படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை கண்டால் ஆச்சர்யம் மேலும் பெருகும். களத்தில் நிறைந்திருக்கும் செயற்கைத்தனங்களை மீறி, திரையில் இயல்பைப் பூக்க வைத்திருப்பதுதான் இயக்குனரின் மாபெரும் வெற்றி. அதனைச் சாதித்திருக்கிறார் லிஜோ.
ஒரு நபர் அதுவரையிலான அனுபவங்களுக்குப் புறம்பான ஒன்றைச் செய்யும்போது, அவரைப் பற்றிய அவதூறுகளே சுற்றியுள்ளவர்கள் மனதில் தோன்றும். இதிலும் அப்படித்தான். சுந்தரத்தின் மனைவியோடு ஜேம்ஸை தொடர்புபடுத்தும் அளவுக்கு அவரைச் சார்ந்தவர்களின் பேச்சுகள் இருக்கின்றன.
அதேநேரத்தில், எளிமையான மனிதர்கள் அமானுஷ்யங்களை கூட வெகுசாதாரணமாகக் கடந்து போவார்கள் என்பதும் இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் மலை மீது நிற்கும் விஜய் சேதுபதி பாத்திரம் மறைந்துபோவதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்; அவரது தந்தையாக நடித்தவர், அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ’முருகன்கிட்ட போய்ட்டானா’ என்று சொல்லிவிட்டுக் கடந்துபோவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதிலும் ஜேம்ஸ் எனும் நபர் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் போன்றே பேசுவதையும் நடப்பதையும் பழகுவதையும் கண்டு அங்குள்ள மக்கள் அதிசயிக்கின்றனர். அதன்பின், அதனை எளிதாக ஏற்றுக்கொண்டு சர்வசாதாரணமாகத் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது.
அமானுஷ்யத்தின் பின்னணியைச் சொல்ல வேண்டுமென்றோ, அதனைப் புடம் போட்டு விளக்க வேண்டுமென்றோ முயற்சிக்கவில்லை. அவ்வளவு ஏன், சுந்தரம் எப்படி மரணித்தார் என்பது கூடத் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.
படத்தின் முடிவிலும் கூட, ஜேம்ஸ் செல்லும் வாகனத்தை சுந்தரத்தின் நாய் பின் தொடர்வதாகக் காட்டியிருப்பது, ’நாங்கள் காட்டிய அமானுஷ்ய நிகழ்வை உங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு புரிந்துகொள்ளுங்கள்’ என்று பார்வையாளர்களின் விருப்பத்திற்கு இயக்குனர் விட்டிருப்பதைக் காட்டுகிறது.
ஒரு காட்சியில் ‘கவுரவம்’ படத்தில் இடம்பெற்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் – அட்வகேட் கண்ணன் இடையிலான வசனம் பின்னணியில் ஒலிக்க, சுந்தரமாக மாறிய ஜேம்ஸ் ‘தனிநடிப்பு’ போல் அந்தந்த பாத்திரங்களாக மாறி அச்சுப்பிசகாமல் அப்படியே பேசுவார். அதனைப் பார்க்கையில், சுந்தரம் என்பவரும் ஜேம்ஸ் போலவே நடிப்பில் ஆர்வம் உள்ளவரா என்ற கேள்வி எழும்.
அதேபோல சுந்தரம், ஜேம்ஸ் எனும் இரு பாத்திரங்களின் மனைவி, மக்கள் இடையே ஏதோவொரு ஒற்றுமை இருப்பதாகத் தோன்றும். அது தொடர்பான கேள்விகளுக்கு, தத்துவார்த்தரீதியில் ஒவ்வொருவரும் ஒரு விடையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்.
’நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைக்கதையில் சுந்தரம் என்பவரின் பெற்றோராக நடித்தவர்களின் பாத்திரப் படைப்பை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். தந்தையாக மறைந்த கலைஞர் பூ ராமு நடித்துள்ளார்.
கண் பார்வைத் திறனற்ற காரணத்தால் சதாசர்வகாலமும் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்களையும் வசனங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தாய் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காணாமல்போன மகனின் குரல் தொனி கேட்டதுமே, அது தனது மகன் தான் என்று நம்பத் தொடங்குவார் அந்த தாய். ‘வந்தவுடனே கிளம்புறியேப்பா’ என்று அரற்றுவார். அந்த நொடி முதல் அவரது கணவரும் ‘வந்தவர் தன் மகன்’ என்றே எண்ணத் தொடங்குவார். இதற்கென்று தனியாக வசனங்கள் கிடையாது.
எண்ணுவதற்குச் சிக்கலான இத்தகைய காட்சியமைப்புகளை, தொழில்முறை நடிகர்கள் அல்லாத உள்ளூர் மக்களை வைத்து எடுப்பதென்பது சிரமம். திரையில் எளிமையையும் யதார்த்தத்தையும் படரவிட, அவரது குழுவினர் மேற்கொண்டிருக்கும் உழைப்பும் மிக அதிகம்.

கலக்கும் மம்முட்டி!
71 வயதிலும் பளிச்சென்று தோற்றமளிக்கும் மம்முட்டியைப் பார்த்து பிரமிக்கத் தேவையில்லை. ஆனால், ‘ரோர்சாக்’ படத்திற்குப் பிறகு இப்படியொரு படத்தைத் தானே தயாரிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறாரே, அதற்கு நிச்சயம் சபாஷ் சொல்ல வேண்டும்.
இதில் ரம்யா பாண்டியன், ராமச்சந்திரன் துரைராஜ், நமோ நாராயணா, ஜி.எம்.குமார் உள்ளிட்ட தமிழ் கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.
லிஜோவின் கதைக்கு ஹரீஷ் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார். தமிழ் வசனங்களை ஜெயகுமார் மண்குதிரை அமைத்துள்ளார். அவை மிக இயல்பாக இருப்பது படத்தின் பலம்.
அதேபோல, காட்சிகளில் நிரம்பியிருக்கும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேமிரா அசைவுகளையும் ஓட்டங்களையும் கொண்டிருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு; தீபு ஜோசப்பின் படத்தொகுப்பு பெரும்பாலும் நீண்ட ஷாட்களை காட்ட மெனக்கெட்டிருக்கிறது. கோகுல் தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு பெரும்பாலும் அந்தந்த லொகேஷன்களில் இருக்கும் முக்கிய அம்சங்களை திரையில் காட்ட மெனக்கெட்டிருக்கிறது.
இந்த கதையில் பின்னணி இசைக்குப் பதிலாக ஒலிக்குறிப்புகளை அதிகமும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். தொடக்க காட்சிகளில் தமிழ், மலையாளப் பாடல்களைப் பயன்படுத்தியவர், கிராமத்துக் காட்சிகளில் ரத்தக்கண்ணீர், கௌரவம் உட்பட அறுபதுகளில் வெளியான படங்களின் வசனங்கள், பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார். அவற்றில் பல இப்படத்தின் காட்சிகளுக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அருமை.
லிஜோ ஜோஸ் பெலிசேரி படங்களின் உள்ளடக்கம் அழகியலற்ற அழகியலைக் கொண்டிருக்கும். எஸ்.ஜே.சூர்யாவின் பாணியில் ‘அழகா இருக்கு.. ஆனா இல்ல’ என்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ‘அங்கமாலி டயரீஸ்’ படத்திற்குப் பிறகு வெளியான ’ஏ மா யு’, ’ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ படங்கள் பொழுதுபோக்கு என்ன விலை என்பதாகவே அமைந்தன. அவற்றில் இருந்து விலகி, சாதாரண ரசிகர்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
தூக்கம் மரணம் என்றால், விழிப்பது புதுப்பிறப்பு தான் என்ற வள்ளுவரின் வாக்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். மலையாளப் படங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சரியான முறையில் காட்டப்படுவதில்லை என்ற குறை சமீபகாலமாக குறைந்து வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் தமிழ் நிலமும் மக்களும் கண்ணியமாக காட்டப்பட்டிருக்கின்றனர். மிக முக்கியமாக, தமிழக மக்களின் வாழ்க்கை முறை கொண்டாடத் தகுந்ததாகக் காட்டப்பட்டிருக்கிறது. அதனைப் பெருமிதப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில், தமிழ் படைப்பாளிகள் பின்பற்றத்தக்க ஒரு பாதையைக் காட்டியிருக்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது!
டிஜிட்டல் திண்ணை: இறையன்புக்கு என்னாச்சு? புதிய தலைமைச் செயலாளர் இவர்தான்…
