நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் முன்னிலையில் மேடைப்பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று ( டிசம்பர் 5) தன்னை தவெகவில் இணைத்து கொண்டார்.
திமுகவில் பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத் திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய போது அவருடன் இணைந்து வெளியேறினார். வைகோ மதிமுகவை தொடங்கிய பிறகு மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் வைகோவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார்.
நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை அளித்தார். மேலும் கட்சிப் பணிகளுக்காக அவருக்கு இன்னோவா கார் ஒன்றும் வழங்கப்பட்டது.
ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி அவர் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்நிலையில் மதிமுகவில் இருந்து விலகிய மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கிய நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று இருந்தார்.
இன்று திடீரென தவெக அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு தவெகவிலும் முக்கிய பொறுப்புகள் அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருந்த நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பது தமிழக அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.
