ADVERTISEMENT

தோல்வி பயத்தில் அரங்கேறும் அரசியல் நாடகம் : நாஞ்சில் சம்பத்

Published On:

| By Kavi

தோல்வி பயத்தில் திமுக அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக தமிழக வெற்றிக் கழக பரப்புரைச் செயலாளர்  நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 28) திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  காங்கிரஸ் தவெகவுடன் செல்லும் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்த நிலையில்,  திமுகவுடன் தான் கூட்டணி என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

ADVERTISEMENT

தற்போதுவரை தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. 

இந்தநிலையில் நாஞ்சில் சம்பத் இன்று (பிப்ரவரி 28) தனது எக்ஸ் பக்கத்தில்,  “தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் அவர்களின் தன்னம்பிக்கையை விட, அடிமனதின் ஆழத்தில் இருக்கும் தோல்வி பயத்தையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் அறிவாலயம் இன்று திணறி வருகிறது. இந்த நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, ஐம்பது கட்சிகளை வளைத்துப் பிடித்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, தாங்கள் ஏதோ பலமாக இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது அல்ல; இது முழுக்க முழுக்க ஒரு “கல்லாப்பெட்டி கூட்டணி”. தங்களுக்குச் சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தியும், தேர்தல் நேரத்து ‘கவனிப்புகளை’ முன்னிறுத்தியும் சிறு சிறு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதிலேயே அறிவாலயம் குறியாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இல்லாத லெட்டர்-பேட் கட்சிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஒரு பெரும் படையைத் திரட்டிவிட்டதாகக் மார்தட்டிக் கொள்வது, ஒரு பலவீனமான வீரன் கூட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்வதற்குச் சமமானது.

தனித்து நின்று களம் காணத் துணிவில்லாத திமுக, இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடி நிற்பது அவர்களின் அரசியல் சரிவையே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாரிசு அரசியலின் ஆதிக்கத்தால் மக்கள் அடைந்துள்ள சலிப்பை இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் மூலம் துடைத்துவிட முடியாது. எத்தனை கட்சிகள் கைகோர்த்தாலும், மக்கள் மன்றத்தில் அறிவாலயத்தின் “கல்லாப்பெட்டி அரசியல்” எடுபடாது. வரும் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் இந்த அதிகாரப் பசி கொண்ட கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share