நாங்குநேரி இரட்டைக் கொலை : 7 பேர் கைது!

Published On:

| By Kavi

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு (மார்ச் 2) சுமார் 9 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்துள்ளது.  முகமூடி அணிந்துகொண்டு மூன்று வாகனங்களில் வந்த இவர்கள் முதலில் அங்கிருந்த டீக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 

ADVERTISEMENT

இதனால் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், அவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர்.  இதில் சம்பவ இடத்திலேயே ஜான் என்ற மாற்றுத் திறனாளி உயிரிழந்தார். வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும்,  பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் ,வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையின்படி, தாக்குதல் நடத்திய கும்பல் மது போதையில் இருந்ததாகவும், கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த சம்பவம் சாதி மோதலா அல்லது போதை கும்பலின் வெறிச்செயலா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

சம்பவ இடத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். 

இந்தசூழலில் நேற்று இரவே பெரும்பத்து  கிராம மக்கள் நாங்குநேரி – களக்காடு சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு என்ன சார் நடவடிக்கை எடுத்தீங்க என்று அங்கு வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதுபோன்று  நேற்று இரவு முதலே நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடிக்கு  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி  மகேஸ்வர் தயாள் நெல்லையில் முகாமிட்டு தென்மண்டல ஐஜி  விஜயேந்திர பிதாரி மற்றும் சரக டிஐஜி சரவணன் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றன.  

நேரில் பார்த்தவர் சொல்வது… 

இந்த கொடூர நிகழ்வை நேரில் பார்த்த பெரும்பத்து கிராம இளைஞர் ஊடகங்களிடம் கூறுகையில்,  “தெக்க இருந்து வந்தாங்க… நாங்க எங்க ப்ரண்ட்ஸ் தான் வராங்கனு நினைச்சிக்கிட்டோம். ஆனா பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க அரிவாள கைல வச்சிகிட்டு  ஒருத்தர விடமாட்டோம்னு சொல்லி வெட்டினாங்க. நான் ஓடிவிட்டேன், இன்னொருத்தர் ஹேண்டிஹேப் என்பதால் அவரால் ஓட முடியல.  டீ மாஸ்டர் முதுகுல வெட்டிட்டாங்க.  இன்னொருத்தர கழுத்துலயே வெட்டிருக்காங்க. 7.30க்கு சம்பவம் நடந்துச்சு.” என்றார்.  

இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

“சட்டம் ஒழுங்கு” என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த ஐந்தாண்டுகளை Lethargic-ஆக
கடந்துவிட்ட இந்த பொம்மை முதல்வரின் அவல ஆட்சியால் ஏற்பட்ட நிலை தான் இது. திமுக ஆட்சியில் உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுகிறது.  !

இப்பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் சமூகத்தை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்துள்ளதாக அச்சத்துடன் போராடி வருகின்றனர்.

இந்த அச்சமும், பதற்றமும் தான் திமுக அரசின் சாதனையா? தொடர்ந்து இப்படி பதற்ற நிலையில் தமிழ்நாட்டை வைத்திருக்க வேண்டுமென திமுக அரசு நினைக்கிறதா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

சமூக சமநிலையை, பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன்?

சமூக மோதல்களை தடுக்க, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வக்கற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக இந்த கொடிய குற்ற சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்..

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்

நெல்லை நாங்குநேரி கொலை சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வீடியோ காலில் ஆறுதல் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்,  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார். 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கடந்த ஐந்தாண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது.

தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒருசேர கொன்றுவிட்டு, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று அறிவாலய அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது.

தவெக தலைவர் விஜய்

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?

இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?

நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?

போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?

மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share