குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்!

Published On:

| By Kavi

Name will be deleted on family card if not confirmed in Tamilnadu Ration Shops

குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என வெவ்வேறு பிரிவுகளில் அட்டைதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நியாயவிலைக் கடைப் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

நேரில் வந்து விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்களைப் பெற முடியாதவர்கள், அதற்கான உரிய படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபர்மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த வாய்ப்பு மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்தோர் போன்றோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவர்களின் பெயர்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

அதாவது, அட்டையில் பெயர் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில் அந்த நடைமுறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த நடைமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சிலர்,

“வங்கிகளில் வாடிக்கையாளர்களின் விவரத்தை உறுதி செய்ய தனி படிவம் அளிக்கப்பட்டு விவரம் பெறப்படும். அதுபோன்ற நடைமுறையே நியாயவிலைக் கடைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள ஒட்டுமொத்த அட்டைதாரர்களின் பெயர், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்து அளிக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த மாதத்தில் பொருள்கள் வாங்க வரும் அட்டைதாரா்களிடம், ‘அட்டையில் பெயர் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்றனர்.

பல நியாயவிலைக் கடைகளில், விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால், குடும்ப அட்டைதாரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொந்தளித்த ரோஹித் சர்மா மனைவி… மும்பை இந்தியன்ஸ் ‘இமேஜ்’ டோட்டலா காலி!

பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!

மோடி ஜி நான் தான் நேரு பேசுறேன்…: அப்டேட் குமாரு

தமிழ் நாட்டின் இன்றைய அதிக மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இதுதான்!

Name on the family card will be deleted

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share