ஏழைகளிடம் கிட்னி கொள்ளை : இடைத்தரகரை தேடும் போலீஸ்!

Published On:

| By Minnambalam Desk

நாமக்கல் பள்ளிப்பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. namakkal kidney sale issue

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் விசைத்தறி தொழில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் நசிவடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் வறுமைக்கு உள்ளாகி உள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வறுமையை பயன்படுத்தி மக்களை முளைச்சலவை செய்து அவர்களது சிறுநீரகங்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் நடவடிக்கையில் இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பள்ளிப்பாளையத்தை அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பேரம் பேசி சிறுநீரகங்கள் பெறப்பட்டு வந்துள்ளன. இதில் பெங்களூரு மற்றும் கொச்சி போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு பேசிய தொகையை தராமல் ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் சிறுநீரக விற்பனை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோதமான சிறுநீரக விற்பனை சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்டது ஆலாம்பாளையம் பேரூரை சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளிபாளையம் ஒன்றிய திமுகவில் கழக பேச்சாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சிறுநீரக விற்பனை குறித்த செய்திகள் வெளியான நிலையில் ஆனந்தன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

2 தனியார் மருத்துமனைகளுக்கு நோட்டீஸ்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஊரக நலப்பணி இயக்குநர்கள் இதுபோன்ற புரோக்கர்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்கள், எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் பெறப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நல பணி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஈரோட்டில் செயல்பட்டு வரும் அபிராமி என்ற தனியார் மருத்துவமனைக்கும், திருச்சியைச் சேர்ந்த சித்தார் என்ற தனியார் மருத்துவமனைக்கும் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழிசை பகீர் தகவல்

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் சிறுநீரகங்களை கடத்த துவங்கி இருக்கின்றார்கள். வெளிநாட்டினருக்கு உறுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது என்று பகிர் குற்றச்சாட்டை முன் வைத்தார். திமுகவை சேர்ந்தவர் நடத்தும் மருத்துவமனையில் வெளிநாட்டவர்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது என்றும், விதிமுறைகளை தாண்டி உடல் உறுப்புகள் வெளிநாட்டவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

பொதுவாக தமிழகத்தினரிடையே எடுக்கப்படும் உறுப்புகள் முதல் கட்டமாக நமது மாநிலத்தவருக்கு பயன்படுத்தப்பட வேண்டும். நமது மாநில தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே வெளி மாநிலத்தவருக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் வெளி நாட்டினருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஆனந்தன் கைது செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது. namakkal kidney sale issue

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share