முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை நலிவுற்றிருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் நேற்று பிப்.23-ந் தேதி இரவு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தவரும் தலைவருமான விடுதலைப் போராட்ட வீரர் ஐயா ஆர் நல்லகண்ணு அவர்கள் கடந்த 15 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மூச்சுத் திணறலை ஒட்டி அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிறுநீரகத்திலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வயது மூப்பால் ஏற்பட்டிருக்கிற ஒரு பின்னடைவு. அவரை காப்பாற்றுவதற்கு அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். அவர் நலம் பெற வேண்டும் என்று விழைகிறோம்.
மிகவும் திடகாத்திரமான உடலுக்குரியவர். ஆனால் தற்போது அவருடைய உடல் மிகவும் நலிவுற்று இருக்கிற காட்சியைப் பார்க்கிற போது மனம் மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த நிலையில் அவரைப் பார்ப்பது மிகவும் கடினமாக வேதனையாக இருக்கிறது.
100 ஆண்டு வாழ்வது என்பது அதுவும் வாழ்க்கையில் ஒரு சாதனை தான். அண்மையில் தான் நூற்றாண்டு விழா கண்டார். அவர் நலம் பெற வேண்டும் என்று விழைகிறோம்.
மருத்துவர்கள் சொன்னது என்ன?
மருத்துவர்கள், “பின்னடைவு தான் ஏற்பட்டு வருகிறது, போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். அவருக்கு நேரடியாக இரைப்பையில் உணவுப் பொருள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல ட்ரக்கியோஸ்டமி (Tracheostomy) செய்யப்பட்டு தொண்டையிலே ஒரு அறுவை செய்து நேரடியாக மூச்சுக் குழலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுநீரகத்தில் உப்பு அதிகரித்திருப்பதால் அந்தத் தொல்லையும் கூடுதலாக அவருக்குச் சிரமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எங்களால் இயன்றவரையில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்”. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
