தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடர்ந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. ஏற்கெனவே சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதனை சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடவடிக்கும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை தொடர்பு அதிகாரியும், மின்வாரிய தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, “தமிழகம் தாய் சேய் நலன் அனைத்திலும் முன்னிலையில் இருந்தாலும், தமிழகத்தில் குடிசை பகுதி மக்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளிகள் போன்ற சாதாரண மக்கள் தங்களின் உடல் நிலையை நோய் வரும் முன்பே மருத்துவரீதியாக முன்கூட்டியே பரிசோதிப்பதில்லை. அதை அடிப்படையாக கொண்டு தான் வைத்து, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம்” என அவர்கள் தெரிவித்தனர்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறுயியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் வகையில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என ஆண் பெண் இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் பணியும் இந்த முகாம்களில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று என்கிற வகையில் 1164 முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஐந்து மாநகராட்சியில் தலா நான்கு வீதம் 20 முகாம்களும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா மூன்று வீதம் 57 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆக மொத்தம் 1256 முகாம்கள் இந்த திட்டத்தின் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் வகையில் மாவட்டம்தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
