பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், லேட்டஸ்டாக மோடி நெல்லைக்கு வந்த அதே தினத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடத்திய ஒரு நகர்வு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஏப்ரல் 15 ஆம் தேதி நெல்லைக்கு பிரச்சாரத்துக்கு வந்தார். அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நரேந்திரனும் உங்களைப் போன்ற தேவேந்திரனிலிருந்து வேறுபட்டவனல்ல” என்று பேசினார்.
திருநெல்வேலி தொகுதியில் பெருமளவு உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை குறிவைத்துதான் மோடி இப்படி வெளிப்படையாகவே பேசினார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் பாஜகவின் இந்த முயற்சிக்கு மோடி நெல்லை வந்த அதே தினத்தில் பெரிய செக் வைத்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
ஏப்ரல் 15 ஆம் தேதி காலை தேவேந்திரகுல வேளாளர் பருத்திக்கோட்டை நாட்டார்கள் சமுதாய நல சங்கத்தினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தேர்தலில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த சம்பவம்தான் நயினார் நாகேந்திரனை திகைக்க வைத்திருக்கிறது.
பருத்திக் கோட்டை நாட்டார்கள் சமுதாய நல சங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 120 தேவேந்திர குல வேளாளர்கள் கிராமங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சங்கம். இச்சங்கம் ஏற்கனவே நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணித்து தமிழ்நாடு முழுவதும் மிகுந்த கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது
“பருத்தி கோட்டை நாட்டார் சொல்லுக்கு பச்சை புள்ளைங்களும் கட்டுப்படும்” என்பது நெல்லை வட்டார வழக்கு. அந்த அளவுக்கு இந்த சங்கத்தின் சொல்லுக்கு மதிப்பு உண்டு.
நாங்குநேரி பகுதிகளில் ஒரு காலத்தில் அதாவது 1500 களில் இருந்தே பருத்தி விவசாயம் புகழ் பெற்றது. பிற்காலங்களில் ராஜபாளையம் மில்களுக்கு போகக் கூடிய பருத்தியில் பெருமளவு நாங்குநேரியில் இருந்துதான் போகும். பருத்தியின் கோட்டையாக விளங்கும் பகுதி என்பதால் இந்த சங்கத்துக்கு பருத்திக் கோட்டை தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்று பெயர்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 70 கிராமங்கள் உட்பட திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 139 கிராமங்கள் இந்த சங்கத்துக்கு பாத்தியப்பட்டவை அதாவது கட்டுப்பட்டவை. ’இப்பல்லாம் யாருங்க இப்படிப்பட்ட சாதி சங்கத்துக்கெல்லாம் கட்டுப்படுறாங்க?’ என்று கேட்டால் அதற்கு 2019 இல் பருத்திக் கோட்டை நாட்டார் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பே ஓர் உதாரணம்.

அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நாங்குநேரி 2019 இடைத் தேர்தலில் இந்த சங்கத்துக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் வாக்குப் பதிவு ஆனது. காரணம் அந்த கிராமங்களில் இருந்த தேவேந்திர குல வேளாளர் அல்லாதவர்கள் ஒரு சிலர் வாக்களித்தனர். முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை கொண்ட 12 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
இப்படிப்பட்ட கட்டுப்பாடு கொண்ட அமைப்பான பருத்திக் கோட்டை நாட்டார் சங்கத்தினர்தான் மோடி வரும் அன்றே, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதன் மூலம் 139 கிராமங்களில் இருக்கும் தேவேந்திர குல வேளாளார் வாக்குகள் அப்படியே திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்லும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
அனிதாவின் இந்த நகர்வின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
“சில நாட்களுக்கு முன் நெல்லை பொறுப்பு அமைச்சர் மாவட்டத்தில் இருக்கும் ஒன்றிய செயலாளர்களோடு ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு பகுதியிலும் என்ன வியூகம் அமைக்கலாம் என்று கேட்டார். அப்போது நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், ‘நாடார், தேவேந்திர குல வேளாளார் வாக்குகளை வாங்கினால்தான் நாங்குநேரியை மொத்தமாக கைப்பற்ற முடியும். பருத்திக் கோட்டை தேவேந்திர சங்கத்துல தலைவர் பிஜேபி, துணைத் தலைவர் அதிமுக, பொருளாளர் நம்ம திமுகவை சேர்ந்தவர். அந்த சங்கத்தினர்கிட்ட நாம பேசி அவங்க தேவைகளை பூர்த்தி பண்ணினால் தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளை அள்ளலாம்’ என்று கூறினார் எட்வின்.
உடனே, ‘இதை செயல்படுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனால் முடியும். அவர்கிட்ட சொல்லுங்க’ என்று தங்கம் தென்னரசு கூற… அதன்படியே இந்த விவரத்தை நெல்லை தொகுதியை கவனிக்க வந்த அமைச்சர் அனிதாவிடம் கொண்டு சென்றார் எட்வின்.
’அவங்களை உடனே அழைச்சிட்டு வாங்க’ என்று அமைச்சர் கூற, அந்த சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் அனிதாவை ஏப்ரல் 15 ஆம் தேதி காலை நெல்லையில் சந்தித்தனர்.

’திருச்செந்தூர் கோயில்ல எங்களுக்கு பாத்தியம் உண்டு. எங்க பருத்திக் கோட்டை சங்கத்துக்கு திருச்செந்தூர்ல எங்க சங்கம் சார்பா கல் மண்டபம் கட்டுறோம். மூலைக்கரைப்பட்டி அருகே இலவச கோச்சிங் சென்டர் கட்டுறோம் அண்ணாச்சி நீங்க உதவணும்’ என்று சங்கம் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
‘திருச்செந்தூர்லதான கட்டுறீங்க. என் தொகுதிதானே… நானே எல்லா உதவியும் செய்யுறேன்’ என்று வாக்குறுதியளித்தார் அமைச்சர் அனிதா.
மேலும் அந்த சங்கத்தினரிடம், ‘உங்களுக்கு பிஜேபி என்னைக்கும் உதவாது… ஒரே கோரிக்கைக்காக போராடுற டாக்டர் கிருஷ்ணசாமியையும் ஜான்பாண்டியனையும் தென்காசியில மோதவிட்டதுதான் பிஜேபியோட திட்டம். அதை புரிஞ்சுக்கங்க’ என்று அனிதா கூற இப்போது பருத்திக்கோட்டை நாட்டார் சங்கத்தினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே சுமார் 140 கிராமங்களில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு உறுதியாகியுள்ளது” என்றனர் நெல்லை திமுக வட்டாரத்தில்.
ஏற்கனவே நயினார் குறிவைத்த இந்து நாடார் ஓட்டுகளை திமுக பக்கம் திசை திருப்பிவிட்டிருக்கிறார் அனிதா. இப்போது பாஜகவின் அடுத்த டார்க்கெட்டான தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளையும் அள்ளுவதற்கு இந்த பருத்திக்கோட்டை ஆபரேஷனை பண்ணியிருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் நயினாரின் கள வியூகங்கள் ஒவ்வொன்றாய் அனிதாவால் முறியடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இதெல்லாம் எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் உறுதியாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
தேர்தல் விதி மீறினால் 2 ஆண்டு சிறை : சத்யபிரதா சாகு
மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?
ஈவிஎம் – விவிபேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்- தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!
