அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நயினார் நாகேந்திரன் ரியாக்ஷன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

nainar nagendhiran

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி எதற்காக சந்தித்து பேசுகிறார் என்பது அவர்கள் இருவருக்குத்தான் தெரியும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் வரும் மார்ச் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்ய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று திருச்சி வந்தனர். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அது குறித்து விரிவாகப் பேசப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றது குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அந்தச் சந்திப்பு எதற்காக என்பது அவர்கள் இருவருக்குத்தான் தெரியும். அது குறித்து நான் கருத்து கூற முடியாது,” எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.

ADVERTISEMENT

திமுக அரசு மீது விமர்சனம்:
மேலும், தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

“தமிழகத்தில் 50 சதவீத பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. பணபலம், அதிகார பலம் என அனைத்துத் துறைகளிலும் திமுக வாரிக்குவித்துள்ளது. ஆனால், அவற்றைவிட மக்கள் பலமே சிறந்தது என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் அவர்களுக்கு உணர்த்துவார்கள்,” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share