திருநெல்வேலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளிக்கும் விருந்தை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புறக்கணிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருநெல்வேலியில் கடந்த ஜூலை 26-ந் தேதி தமது இல்லத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு பிரம்மாண்ட விருந்து கொடுத்தார் நயினார் நாகேந்திரன். இதில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி இரவு 7 மணிக்கு தமது இல்லத்தில் விருந்து அளிக்கிறார் நயினார் நாகேந்திரன். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நயினார் நாகேந்திரன் அளிக்கும் இந்த விருந்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இதேபோல் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரையும் நயினார் நாகேந்திரன் விருந்துக்கு அழைத்துள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் நாகேந்திரன் அளிக்கும் இந்த விருந்தில், தமிழக பாஜக தலைவர்களில் அண்ணாமலை மட்டும் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக தலைவராக இருந்த போதும் அதன் பின்னரும் அதிமுகவுக்கு எதிரான கருத்துகளையே அண்ணாமலை கூறி வருகிறார். அதிமுகவினரை காயப்படுத்தும் வகையில் கூட்டணி ஆட்சி- ஆட்சியில் பங்கு என்றும் அண்ணாமலை பேசியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருடன் விருந்தில் அண்ணாமலை பங்கேற்காமல் புறக்கணிக்கிறார்.
நயினார் நாகேந்திரனுடன் இன்று காலை முதல் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சி, செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் அண்ணாமலை பங்கேற்றிருந்தார். ஆனாலும் அதிமுகவினருக்கு நயினார் நாகேந்திரன் விருந்து வழங்குவதால் அதில் பங்கேற்க விருப்பமில்லாமல் புறக்கணிக்கிறார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
இசக்கி சுப்பையாவுக்கு முக்கியத்துவம்
இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா முன்னர் டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்தவர். பின்னர் அதிமுகவில் மீண்டும் இணைந்து எம்.எல்.ஏ.வானார். கடந்த சில மாதங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது இசக்கி சுப்பையா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இசக்கி சுப்பையாவுடன் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த பின்னணியில், நெல்லை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார் இசக்கி சுப்பையா. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் இசக்கி சுப்பையா சமரசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
