மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக மக்கள் சார்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, பட்ஜெட்டில் தமிழகத்திற்கான முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என திமுக எம்பிகள் முழக்கமிட்டனர். தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் வழிகாட்டுதலின் படி, நமது தலைநகர் சென்னையை ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுடன் இணைத்து, ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடச் சேவையை அறிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
