நாகப்பட்டினம் – காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் சேவை இன்று (அக்டோபர் 14) காலை தொடங்கியது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து ரூ.3 கோடி செலவில் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை, உடமைகள் பாதுகாப்பறை, ஆய்வு அறை என அனைத்துக்கும் தனித்தனி அறைகள் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளது.
பின்னர் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று அக்டோபர் 10 ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அக்டோபர் 14 தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.
இதனால் கப்பலில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அறிவித்தபடியே இன்று கப்பல் சேவை தொடங்கியது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நாகையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த கப்பல் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாகையிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு?
இந்த கப்பலின் மூலம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைமுகம் இடையே உள்ள 60 நாட்டிகல் மைல் தூரத்தை 3 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
தினசரி நாகப்பட்டினத்தில் இருந்து காலை 7 மணிக்கு கப்பல் புறப்பட்டு பகல் 11.30 – 12 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் மாலை 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.

ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட சுங்கத்துறை அனுமதி வழங்கிய பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கப்பலில் பயணிக்க ரூ.6,500 மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7,670 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், முதல் நாள் முதல் பயணம் செய்வதற்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.3,000 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் www.kpvs.in என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன் லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசாவையும் ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
கப்பலில் உள்ள வசதிகள் என்ன?
நாகப்பட்டினம் – இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டது.

அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் கொண்ட குழுவினர் இயக்கும் இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகள் அமர்ந்தபடி பயணம் செய்யலாம்.
கப்பலில் எவ்வாறு பயணம் செய்வது?
நாகை – காங்கேசன் துறைக்கு பயணம் செய்ய கட்டாயம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் பயணிகள் இலங்கை செல்ல முடியும்.
விமான நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தான் கப்பலில் பயணிப்பதற்கும் பின்பற்றப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைகளுக்கு பின்னர் தான் பயணிகள் கப்பலில் அனுமதிக்கப்படுவர்.
துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்குள்ளாகவே துறைமுகத்திற்குள் பயணிகள் வந்து விட வேண்டும்.
இந்தியர்கள் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்பி வருவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.
நாகை – காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாது வணிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிக் பாஸ்: “நமக்குள்ள வரதுக்கு அவ யாரு” – கடுப்பான ரவீனா
நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி: முதல் இடத்தில் தொடரும் ஆதிக்கம்!
