மஹிந்திரா தார் (Mahindra Thar) வைத்திருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும், எந்த நிலபரப்பிலும் வண்டியை ஓட்டுவார்கள் என்பது தெரியும். அதற்காக ரயில் தண்டவாளத்தையே சாலையாக நினைத்து ஓட்டினால்? அப்படி ஒரு விபரீத சம்பவம் நாகாலாந்தில் அரங்கேறி, இணையவாசிகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.
நடந்தது என்ன? நாகாலாந்து மாநிலம் திமாபூர் (Dimapur) ரயில் நிலையம் அருகே, கடந்த டிசம்பர் 16-ம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 65 வயதான முதியவர் ஒருவர், தனது மஹிந்திரா தார் (பதிவு எண்: NL-01/CA-8181) வாகனத்தை, சர்வ சாதாரணமாக ரயில் தண்டவாளத்தின் மீது ஏற்றி ஓட்டிச் சென்றுள்ளார்.
பர்மா கேம்ப் (Burma Camp) பழைய மேம்பாலத்திற்கு அருகே உள்ள முதலாவது ரயில் பாதையில் (Line 1) சென்று கொண்டிருந்தபோது, வாகனம் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. நல்லவேளையாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மீட்பு மற்றும் கைது: தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் போலீசார், தண்டவாளத்தில் சிக்கிய காரை மீட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ அல்லது ரயில்வே சொத்துக்களுக்குச் சேதமோ ஏற்படவில்லை.
வாகனத்தை ஓட்டிய முதியவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 153 (பயணிகள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல்) மற்றும் 147 (அத்துமீறி நுழைதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையா? இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காரை ஓட்டியவர் நிதானத்தில் இல்லை என்றும், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். “ரயிலுக்கு வழிவிடச் சொல்லி ஹாரன் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சிலர் கிண்டலாகவும், சிலர் கோபமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
கடுப்பான போலீஸ்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாகாலாந்து போலீஸ் கடுப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. “தண்டவாளத்தில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல; அது தற்கொலைக்குச் சமமானது. இதுபோன்ற சாகசங்கள் பயணிகளின் உயிரைப் பணயம் வைக்கும் செயல்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி இல்லாமல், பொதுச்சொத்தையும், உயிரையும் துச்சமாக மதித்துச் செயல்பட்ட இந்த முதியவரின் செயல் கண்டிக்கத்தக்கது. ‘ஆஃப்-ரோடு’ (Off-road) சாகசம் செய்வதற்குத் தண்டவாளம் ஒன்றும் விளையாட்டு மைதானம் அல்ல!
