இந்திய சினிமாவின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் வரிசையில் இருக்கும் ஒரு முக்கிய திரைப்படம் ‘கல்கி’. இந்தத் திரைப்படத்தை கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் கூறுகையில், ‘மகாபாரதத்தில் ஆரம்பிக்கும் இந்த கதை 2898 ஆம் ஆண்டு வரை நடைபெறுகிறது.
ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்குள் நடக்கும் கதைக்களம் என்பதால் அந்தந்த காலங்களுக்கு ஏற்ற உலகங்களை எங்கள் கற்பனையில் உருவாக்க வேண்டி இருந்தது.
நிச்சயம் இது ஒரு இந்திய மண் சார்ந்த படமாகவே இருக்கும். குறிப்பாக ‘பிளேட் ரன்னர்(blade runner)’-ஐ போல் இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.

மகாபாரதத்தில் ஆரம்பிக்கும் கதையாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம் கலியுகத்தில் முடிவடைகிறது. நிச்சயம் தொன்மம் சார்ந்த ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக இந்த ‘கல்கி’ திரைப்படம் இருக்குமெனத் தெரிகிறது.
கடைசியாக வெளியான ‘சலார்’ உட்பட அடுத்தடுத்து பிரம்மாண்ட ஃபிளாப்களை வரிசையாகக் கொடுத்து வரும் நடிகர் பிரபாஸ் மிகவும் நம்பி இருப்பது இந்தப் படத்தை தான்.
இந்தத் திரைப்படத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு வில்லனாக மிக சில படங்களிலேயே கமல்ஹாசன் இதுவரை நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
–ஷா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவின் பொருட்களை ரூ.48 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம்: மனோ தங்கராஜ்
