“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும்” – விஷால்

Published On:

| By Selvam

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையிலான கட்டிடமாக வரப்போவதால் நடிகர் சங்க கட்டிடத்திற்கு இடையூறுகள் வருவதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்டம்பர்10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், நடிகைகள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பு, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். நடிகர் ஶ்ரீமன் தொகுத்து வழங்கினார். நடிகை கோவை சரளா 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசிக்க, கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், நடிகர்களிடம் நிதி திரட்டுதல், நட்சத்திர கலைவிழா நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி தீர்மானத்திற்கு பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நாசர் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்
கூட்டத்துக்குப் பின்னர் நாசர்,  விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் விஷால் “நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இரண்டாவது முறையாக எங்களைத் தேர்வு செய்ததற்கு காரணம், எங்கள் மீதான நம்பிக்கைதான். நடிகர் சங்க கட்டடத்தைத் தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்.

எனவே, அந்த கோரிக்கையை நிறைவேற்றும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபடுகிறோம் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் நடைபெறும். இரண்டாவது முறை சங்கத்தின் பொறுப்பாளர்களாக வரவேண்டும் என்று இங்குள்ள யாரும் விரும்பவில்லை. இருந்தாலும், நடிகர் சங்கத்துக்கான இடத்தை மீட்டதே ஒரு பெரிய விஷயமாக கருதுகிறோம். அதேநேரம், தேர்தல் நடத்துவதற்கு முன்னால், இன்னும் ஒரு 5 மாத காலம் கொடுத்திருந்தால், நாங்கள் கட்டிடத்தை கட்டி முடித்திருப்போம்.

தேர்தல் நடந்தது, அதன்பின்னர் கொரோனா வந்துவிட்டது. கிட்டத்தட்ட 3 வருடத்துக்குப் பின்னர், கட்டிடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டது. எனவே, இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றும், வங்கிக்கடன் பெற்று, சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையிலான கட்டிடமாக வரப்போவதால்தான், நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு இத்தனை இடையூறுகள் வருகிறது. இதையெல்லாம் தாண்டி, இம்முறை கட்டிடடம் நிச்சயம் கட்டப்படும்” என்றார்.

அப்போது மருத்துவ வசதி கிடைக்காமல் நடிகர்கள் இறப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “மருத்துவ முகாம்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், கார்த்தி, நாசர், பூச்சிமுருகன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடத்தியுள்ளனர். நடிகர் சங்கத்தில் நிதி இல்லை என்றாலும்கூட, அவர்களது சொந்தப் பணத்தில், நடிகர்களுக்கான மருத்துவமுகாம்களை நடத்தியுள்ளனர்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிதி இல்லாத காரணத்தால்தான், நடிகர்களுக்கு மருத்துவம் சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கே, ஒவ்வொருவரிடமும், நிதி உதவி பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். வங்கியில் இருக்கின்ற நிதியைப் பொறுத்து, தனிப்பட்ட முறையில் நடிகர்களிடம் சங்கம் மூலம் பணத்தைப் பெற்றுத்தான், மருத்துவமுகாம்கள் நடத்தப்படுகிறது” என்று அவர் கூறினார்.

இராமானுஜம்

சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

மார்க் ஆண்டனி: கருப்பன சாமி லிரிக் வீடியோ வெளியீடு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share