முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அகில இந்திய நாடார் மகாஜன சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Nadar Sangam strongly condemns Rajendra Balaji
விருதுநகரில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து சிவகாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜேந்திர பாலாஜி, “மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்.
கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு உள்ளது? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய நாடார் மகாஜன சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “முன்னாள் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் ஏழை பங்காளர், நேர்மையான அரசியலுக்கு உதாரணமானவர். இவரைப் போன்றவர்களை பாதுகாப்பது இன்றைய அதிமுகவிற்கு மிகவும் தேவையான ஒன்று. அப்படி இருக்க ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ராஜேந்திர பாலாஜி உனக்கு விருதுநகர் மாவட்டம் மட்டும்தான் தெரியும். நாவினை அடக்கி பேச வேண்டும். தன் மரியாதையை தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது.
மாஃபா பாண்டியராஜனுக்கு உலகம் முழுவதும் வேர்கள் இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை தன் உழைப்பால் வாழ வைத்தவர். இன்றும் பல குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். 15 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தவர், உனக்கு என்ன வரலாறு இருக்கிறது ஆகவே நாவை அடக்கி பேசு ராஜேந்திர பாலாஜி.
மாஃபா பாண்டியராஜன் படித்தவர், பண்பானவர். அவருக்கு அடாவடியாக பேசத் தெரியாது உன்னை போன்றவர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீ மேடையில் உன் கட்சிக்காரனை அடிப்பாய், நாங்கள் தேவைப்பட்டால் உன்னை வீடு ஏறி வந்து அடிக்க வேண்டி இருக்கும். திருந்து அல்லது திருத்தப்படுவாய்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Nadar Sangam strongly condemns Rajendra Balaji