ஒலிம்பிக் கனவிற்கு செக் வைத்த NADA… மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா எதிர்ப்பு!

Published On:

| By christopher

bajrang punia

தனது சிறுநீர் மாதிரிகளை ஊக்க மருந்து சோதனைக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வழங்கத் தவறியதாக கூறி, அவரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (என்.ஏ.டி.ஏ) இடைநீக்கம் செய்துள்ளது.

வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள பஜ்ரங் புனியா தகுதி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அரியானா மாநிலம் சோனேபட்டில் உள்ள ஆய்வகத்தில் நடந்த ஊக்கமருந்து சோதனைக்கு அவர் சிறுநீர் மாதிரிகளை வழங்க தவறியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி குறிப்பிட்டு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மறு உத்தரவு வரும் வரை அனைத்து வகையிலான மல்யுத்த போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பஜ்ரங் புனியா கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரிகளை சமர்பிக்க மறுத்தது குறித்து மே 7ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் கோரி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

என்.ஏ.டி.ஏவின் இந்த நடவடிக்கைக்கு புனியா மறுப்பு தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“என்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்ட செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணைய அதிகாரிகளிடம் எனது ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரிகளை வழங்க நான் ஒருபோதும் மறுத்ததில்லை. எனது ஊக்க மருந்து மாதிரியை எடுக்க அவர்கள் கொண்டு வந்த காலாவதியான கிட் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு முதலில் பதிலளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அதன் பின்னர் எனது ஊக்கமருந்து சோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும். இந்தக் கடிதத்திற்கு எனது வழக்கறிஞர் விதுஷ் சிங்கானியா உரிய நேரத்தில் பதிலளிப்பார்” என்று புனியா பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஊக்கமருந்து மாதிரிகளை சேகரிக்க வந்த அதிகாரி காலாவதியான கிட் கொண்டு வந்ததாக பஜ்ரங் புனியா வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இது தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’கள்ளக்கடல்’ எச்சரிக்கை எதிரொலி : திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை!

அரண்மனை 4 : திரை விமர்சனம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share