ராஜன் குறை
சென்ற வாரம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் கருப்புத் திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்ததை ஒட்டி பலரும் கருத்து சொன்னார்கள். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்து “எருமை கூடத்தான் கருப்பாக இருக்கிறது” என்றெல்லாம் சீறியது சர்ச்சைக்குள்ளானது. அவருடைய கோபம் திராவிடன், தமிழன் என்று இரண்டு அடையாளங்களையும் யுவன் சங்கர் ராஜா இணைப்பது. திராவிட இயக்கம் நூறாண்டுகளாக செய்து வரும் இணைப்புதான் அது. தமிழ் மக்களை திராவிடத் தமிழர்கள் என்றே அது கட்டமைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி அந்த இணைந்த அடையாளத்தை அறவே வெறுக்கிறது. அந்த வெறுப்புக்கான காரணம் மிகவும் பிற்போக்கான, நவீனமற்ற, குறுகிய நோக்குகொண்ட அடையாள அரசியல். அதை ஏதோ புரட்சிகர அரசியல் போல பேசி வருகிறார்கள். அவர்கள் எதனால் அப்படி கூறுகிறார்கள், அவர்களுக்கு கூறப்படும் மறுப்புகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
**தமிழன் – திராவிடன்: ஒரே வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்தவை**
ஜி.ஏ.கிரியர்சன் என்ற மொழியியலாளர், தேவநேயப் பாவாணர் உள்ளிட்டோர் தமிழ், தமிழம் என்ற சொற்கள்தான் திரமிளம், திரவிடம் எனத்திரிந்து திராவிடம் என வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். இதனை அடியொட்டி பல திராவிடத் தமிழ் உணர்வாளர்கள் இரண்டு சொற்களும் ஒன்றுதான் என்பதை விளக்கி வருகின்றனர். திராவிடம் என்பது இனத்தைக் குறிப்பதாகவும், தமிழ் என்பது மொழியைக் குறிப்பதாகவும் மாறிவிட்டது என்பது இவர்கள் கருத்து. அந்த இனத்தைக் குறிக்கும் சொல் தமிழிலிருந்து கிளை பிரிந்து இன்று திராவிட மொழிக் குடும்பமாக அறியப்படும் பிற தென்னிந்திய மொழிகளை பேசுவோரையும் குறித்தாலும், தமிழரையும் அப்படி குறிப்பதில் பிழையொன்றுமில்லையே என்பது அவர்கள் விளக்கம்.
நாம் தமிழர் கட்சியினர் இதற்கு ஒரு பதிலை வைத்துள்ளனர். தமிழ், திராவிடம் என்பதும் அடிப்படையில் ஒரே சொல் என்றால் ஏன் தமிழ் என்றே சொல்லக் கூடாது என்பது அவர்கள் கேள்வி. எல்லா விவாதங்களிலும் இதைக் கேட்டுவிட்டு வெற்றி புன்னகை புரிவார்கள். தமிழக அரசியல் ஆரிய – திராவிட வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட கட்டப்பட்ட பார்ப்பனரல்லாதோர் அரசியல் என்பதும், அதனால் திராவிடம் முக்கிய சொல்லாகிறது என்பதும் அவர்கள் அறியாததல்ல. ஆனாலும் திராவிடம் என்ற சொல் தேவையற்றது, தமிழ் என்ற சொல்லே மொழியையும், இனத்தையும், அனைத்து அடையாளங்களையும் குறிக்க போதுமானது என்பது அவர்கள் வாதம். இதை உடைத்துப் பார்த்தால் அவர்களுக்கு பார்ப்பனரல்லாதோர் அரசியல் என்பதில் ஆர்வமில்லை என்பதும், மொழி அடையாள அரசியலில் மட்டுமே ஆர்வமிருக்கிறது என்பதும் தெரியும்.
பார்ப்பனரல்லாதோர் அரசியலில் ஒரு முற்போக்கு, நவீன உள்ளடக்க வடிவம் இருந்தது. அது என்னவென்றால் ஜாதீய ஏற்றத்தாழ்வை வலியுறுத்திய பார்ப்பனீய-சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்களை மறுதலிப்பது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை பண்பாட்டு அடிப்படையாகக் கொள்வது. அந்த பார்ப்பனீய நீக்கத்தின் அடையாளமாக திராவிடம் என்ற சொல் பயன்படுகிறது; அதற்குக் காரணம் சமஸ்கிருதம் ஆரிய மொழியென்றும், அதை பயன்படுத்தும் பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றும் அடையாளப்படுத்தப்படுவதை அவர்களே ஏற்றுக்கொண்டதால், இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியலில் திராவிடம் என்ற சொல் முதன்மை பெற்றது.
அண்ணாவின் ஆரிய மாயை நூல் தமிழ் மொழியிலும் பார்ப்பனீயக் கருத்துகள் புகுந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எந்தெந்த வர்ணத்தாரை எந்தெந்த பா வகைகளில் பாடலாம் என்றெல்லாம் வகுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அப்படிப்பட்ட ஆரிய சிந்தனையின் ஊடுருவலை களையெடுக்க தமிழ்மொழி திராவிட அடையாளத்துடன் இணைவது அவசியமாக இருந்தது. இந்த வரலாற்றை இருட்டடிப்பு செய்து, முற்போக்கு உள்ளீடற்ற, பிற்போக்கு மீட்புவாத மொழி அடையாளவாதத்தை முன்னெடுக்கிறது நாம் தமிழர் கட்சி. அது ஏன் அப்படி செய்கிறது என்பதையும் சரிவர புரிந்துகொள்ள வேண்டும்.
**யாருக்கு எதிராக யாரை ஒருங்கிணைப்பது? **
அரசியல் என்பதே நண்பன் யார், எதிரி யார் என்று வரையறுத்து அணி சேர்ப்பதுதான் என்று கார்ல் ஸ்மிட் என்ற ஜெர்மானிய அரசியல் சிந்தனையாளர் கூறினார். ஆனால், அவர் இந்த அணி சேர்ப்பு ஏற்கனவே உள்ள அடையாளங்களின் அடிப்படையில் அமைவது சரியான அரசியல் அல்ல, நவீன அரசியல் அல்ல, புதிதாக கட்டப்படும் அடையாளங்களின் துணையுடன் புதிய எதிரணியை உருவாக்குவதுதான் அரசியல் செயல்பாடு என்றும் கூறினார். சுருங்கச் சொன்னால் ஒருவரது வம்சாவழி அடையாளத்தை வைத்து அவரை எதிரியாகக் கட்டமைப்பது என்பது. விலக்குவது நவீன அரசியல் இல்லை; அது பிற்போக்குவாதம்.
திராவிட இயக்கம் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாதோரை திரட்டும்போது அது வம்சாவழி அடையாளத்தைக் கையாண்டதே என்று கூறத் தோன்றும். இது பிழையான கருத்து. பார்ப்பனர்களின் சமூக மேலாதிக்கத்தையும், கருத்தியல் மேலாண்மையையும் எதிர்த்ததே தவிர, பிறப்பனடிப்படையில் பார்ப்பனர்களை எதிர்த்ததில்லை. ஒருவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதற்காகவே அவரை அரசியலில் தவிர்த்தது இல்லை. ஜெயலலிதா முதல்வரானபோதும் அவர் ஜாதி அடையாளத்தை மையப்படுத்தி அரசியல் செய்ததில்லை. அவர் 69% இட ஒதுக்கீட்டினை உறுதிசெய்தபோது திராவிடர் கழகம் பாராட்டவே செய்தது.
ஆனால், நாம் தமிழரின் பிரச்சினை, திராவிடர் என்று சொல்லுவதால் தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசக்கூடியவர்களின் வம்சாவழியினர் அரசியலில் தலைமை பொறுப்புக்கு வருகிறார்கள், ஆட்சி பொறுப்புக்கு வருகிறார்கள் என்பதாகும். இது வடிகட்டிய பிற்போக்குவாதம். ஏனெனில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தொழில் செய்து வாழும் யாரும் தமிழக அரசியலில் பங்கெடுக்க முடியும், ஆட்சி செய்யவும் முடியும் என்பதுதான் நவீன அரசியல். குடியுரிமை என்று வந்தால் இந்தியக் குடியுரிமை இருந்தால் போதும். அதற்காக ஆந்திராவில் வசிக்கும் ஜெகன் தமிழக அரசியலில் தலைவராக முடியாது என்பது வெளிப்படையானது. தமிழ் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் அங்கம் வகித்து தமிழகத்தில் வாழ்பவர் ஒருவர்தான் இயல்பாகவே அரசியலில் ஈடுபடுவார்; ஆட்சிக்கு வருவார். அவர் வம்சாவழி என்பது அவருக்கு தடையாக இருக்க முடியாது.
நாம் தமிழர் கட்சியினர் சுட்டிக்காட்டும் ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர். அவர் மலையாளி என்று கூறுவது. ஆம்; அவர் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேனன் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சிறு வயதிலிருந்தே தமிழ்நாட்டில்தான் வளர்ந்தார். தமிழ்ப் படங்களில் நடித்தார். தி.மு.க-வில் பங்கேற்றார். அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியில் தமிழ்நாட்டை கேரளாவுக்கு விற்றுவிட்டாரா என்ன? அவர் தமிழர்களில் ஒருவராக தமிழ்நாட்டை ஆண்டார். அவர் மீது அரசியல் ரீதியாக நிறைய விமர்சனங்களை சொல்லலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் அவர் வம்சாவழி அடையாளத்தை குறித்ததல்ல. வம்சாவழித் தமிழர் என்பதால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அவரைவிட சிறந்த தலைவர்களும் அல்ல. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றுதான் குறள் கூறுகிறதே அல்லாமல் அவரவர் பிறப்பால் காணப்படும் என்று கூறவில்லை.
**பிறப்படையாள பிற்போக்கு நோக்கு **
அரசியல் தலைமை, ஆட்சித் தலைமை என்று வரும்போது பலரும் இந்தப் பிற்போக்கு நோக்குக்கு ஆட்படுவதைக் காணமுடியும். காங்கிரஸ் கட்சி 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது, என் நண்பர்கள் சிலரே கூட நூறு கோடி இந்தியர்களை இத்தாலியில் பிறந்த சோனியா ஏன் ஆள வேண்டும் எனக் கேட்டனர். சோனியா இந்தியரை மணந்தார். நாற்பதாண்டுகளாக இந்தியாவில் வாழ்கிறார். இந்திய குடியுரிமை பெற்றவர். நவீன அரசியல் நோக்கில் அவர் பிரதமராவதில் எந்த தவறும் இல்லை; உண்மையில் அது பெருமைக்குரியதுதான். குறுகிய நோக்கற்ற தேசியமாக இந்திய தேசியம் விளங்குகிறது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் பாஜக பாசிசம் கடுமையாக பிரச்சாரம் செய்தது. சோனியாவே எதற்கு இந்த பிரச்சினை என்று மன்மோகன் சிங்கை பிரதமராக்கிவிட்டார். இன்று யோசித்துப் பார்த்தால் அவர் அதை செய்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற சியாமளா பெண்ணுக்கும், ஜமைக்காவிலிருந்து வந்த ஆணுக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராக இருக்கிறார். அங்கே யாரும் வந்தேறிகள் நாட்டை ஆளலாமா என்று கேட்பதில்லை. இதற்கு முன் அதிபராக இருந்த ஒபாமாவின் சொந்தங்கள் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இருந்தார்கள். அமெரிக்கா முழுவதுமே அறுதிப் பெரும்பான்மை வந்தேறிகள்தான். கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் அவர்கள் மூதாதையர்கள் எப்போது குடியேறினார்கள் என்றுதான் கேட்க முடியும். காலக்கோட்டை கொஞ்சம் பின்னால் நகர்த்தினால், சில ஆயிரம் ஆண்டுகள் என்று போனால், உலகில் எல்லோருமே எங்கிருந்தோ புலம்பெயர்ந்து எங்கோ வந்தேறியவர்கள்தான். யாருமே மரம் செடி கொடிகளை போல நிலத்தில் முளைப்பதில்லை. அப்படி முளைக்கும் தாவரங்களின் விதை கூட தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து பறவை இட்ட எச்சமாக இருக்கும். அவ்வளவு ஏன், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவழியை சார்ந்தவர் முயல்வதாகக் கூறப்படுகிறது. இது நடக்கவும் வாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நோக்கம் என்பது பார்ப்பனீய நீக்கம், மாநில சுயாட்சி ஆகிய லட்சியங்களை மழுங்கடித்து, தமிழகத்தில் வசித்து, தமிழ்நாட்டு நலனுக்காக பாடுபடும், தமிழ் ஆர்வலர்களாக இருக்கும் தெலுங்கு வம்சாவழியினரை வடுக வந்தேறிகள் என்று கூறி அவர்களுக்கு எதிராக தமிழ் வம்சாவழியினர் என்று சில ஜாதிகளைத் திரட்டி பிற்போக்கு அரசியல் செய்வதாகும். அதற்காக வெளிப்படையாகவே ஹிட்லர் போன்ற நாஸி தலைவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றனர்.
ஆனால் இதிலுள்ள மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால் இதே போன்ற தமிழ் வந்தேறிகளுக்கு எதிராக சிங்களப் பூர்வகுடிகள் என்ற அரசியல்தான் இலங்கையில் தமிழர் ஒடுக்கப்படுவதற்கும் இனப்படுகொலைக்கும் காரணமானது. நாம் தமிழர் கட்சி பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் கொண்டாடும், வழிபடும் கட்சி. எத்தகைய பிற்போக்கு நோக்கு இலங்கையில் இனவாத அரசியலை வளர்த்து அந்த தேசத்தை பாழ்படுத்தியதோ, தமிழர்களின் நல்வாழ்வை சீர்குலைத்ததோ அதே இனவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க விரும்புகிறார்கள். இதைவிட பெரிய அரசியல் அபத்தம் வேறென்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை.
தமிழ் ஊடகங்களும் இத்தகைய பிற்போக்கு அரசியலுக்கு தரும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். சர்ச்சைகளுக்கு மக்களிடையே வரவேற்பிருக்கும் என்ற காரணத்துக்காக மீண்டும், மீண்டும் சீமானின் அர்த்தமற்ற, ஆபத்தான கூற்றுக்களை முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இனவாத சிந்தனைகளை முன்னெடுக்கும் கட்சியென நாம் தமிழர் கட்சியை அடையாளப்படுத்தி விலக்க வேண்டும்; அல்லது அவர்கள் நிலைபாட்டினை மாற்றிக்கொள்ள சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் வசிக்கும் எந்த மாநிலத்தின் வம்சாவழியினருக்கும் தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் பங்கேற்கும் உரிமை இருக்கிறது. இன்று பீகாரிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ தொழிலாளர்களாக வந்துள்ளவர்களின் பிள்ளைகள் நாளைக்கு தமிழில் கல்வி பயின்று அரசியலில் ஆர்வம்கொண்டு அரசியல் கட்சிகளில் சேர்ந்தால் அவர்களுக்கும் தலைமைப் பொறுப்புகளுக்கு வரவும், ஆட்சியில் பங்கெடுக்கவும் உரிமை உள்ளது. அவர்கள் உழைப்பு மட்டும் தமிழ்நாட்டுக்கு வேண்டும், அவர்களுக்கு உரிமைகள் எதுவும் கிடையாது என்று கூறுவது தமிழ் நாகரிகத்திற்கே எதிரானது. தமிழ் சிந்தனையின் மூத்தோன் தமிழன் பூங்குன்றன் என்றால் இந்த வந்தேறிப் பேச்சை அரசியல் களத்திலிருந்து முற்றிலும் வெளியேற்றுவோம். நவீன அரசியலில் நண்பர்களும், எதிரிகளும் கொள்கைகளால் உருவாக வேண்டுமே தவிர, வம்சாவழி அடையாளத்தால் அல்ல. நாம் தமிழர் அரசியல் நவீன அரசியலாக மாற வேண்டும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
**ராஜன் குறை கிருஷ்ணன் **- பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com