அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் இன்று (டிசம்பர் 23) அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக் கழகம்” என்ற வார்த்தைகள் மட்டும் இருக்கும் நிலையில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையை திமுக அரசு விட்டு விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்ற வார்த்தைக்கு முன்பு தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக இன்று மாலை (டிசம்பர் 23) கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேரறிவாளன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பேருந்துகளிலும் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

நாம் தமிழர் கட்சியினர் பேருந்து நிலையத்திற்குள் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியதால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் அழிக்கப்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரை தவிா்க்க வேண்டிய அவசியம் என்ன? இது குறித்து புகாா் அளித்தும், எவ்வித பலனும் இல்லை. கா்நாடகம், கேரளம், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும், அதன் மாநில பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியுள்ளனா்.

ADVERTISEMENT

தமிழக அரசும் உடனடியாக மீண்டும் பழையபடி அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என முழுமையாக எழுத வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் இன்று கோவையில் நாம் தமிழர் கட்சியினர் பேருந்துகளில் தமிழ்நாடு என பெயர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share