மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ’மாநில கட்சி’ என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களை கைப்பற்றியது. அக்கூட்டணியை தவிர்த்து அதிமுக மற்றும் மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவின.
அதே போன்று 40 தொகுதிகளிலும் வழக்கம்போல் தனித்து களம் கண்ட சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனினும் இந்த முறை குறிப்பிடத்தக்க விதமாக 8.19% வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
ஒரு கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற பொதுத்தேர்தலில் மாநிலத்தில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8%-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை, திருச்சி, புதுச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி, மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
மேலும் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது.
மொத்தம் 8.19% வாக்குகளை பெற்று, தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது 8.19 சதவீத வாக்குகளை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னம் மாற்றப்பட்டு கடைசி நேரத்தில் ’ஒலி வாங்கி’ சின்னத்துடன் களத்தில் போராடிய நிலையில், தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”இந்தியா கூட்டணியில் சேரமாட்டோம்” : தெலுங்கு தேசம் உறுதி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்? : கங்குலி ரியாக்சன் என்ன?
