தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 80 லட்சம் பேர் பதிவு செய்து, வேலைக்காகக் காத்திருப்பதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அவ்வப்போது ஏற்படும் காலி பணியிடங்களுக்குத் தேர்வுகள் மூலமும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 30ஆம்தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து, வேலைக்காகக் காத்திருப்பதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
இதில், 18 வயதுக்குட்பட்டவர்களில் 20 லட்சத்து 90 ஆயிரத்து 863 பேரும், 18 வயது முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 20 லட்சத்து 20 ஆயிரத்து 66 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 27 லட்சத்து 8 ஆயிரத்து 836 பேரும், 36 வயது முதல் 56 வயதிற்குட்பட்டவர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 621 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,440 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதேபோல, மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 27 ஆயிரம் பேரும் தங்களுடைய பெயரைப் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
