வெளிநாட்டில், இந்தியர்களின் பங்களிப்பு காரணமாக தான் மதிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ , பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் ஆனந்த குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது,
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மதிக்கும் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உங்களை வரவேற்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாள், ஆப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தியடிகள் இந்தியாவிற்கு இன்று திரும்பிய மகத்தான நாளாகும். இந்த மாநாடு ஒரு திருவிழா. இங்கு தான் நீங்கள் பார்வையாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் இருக்க முடியும். வெளிநாட்டில் அதிகளவில் வசிப்பதால் இந்தியர்கள் மதிக்கப்படவில்லை. அவர்களின் பங்களிப்பு காரணமாகவே மதிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளில், 3.9 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்கள் வெளிநாடுகளில், இந்தியாவின் கலாசாரம், மாண்பு, மதிப்பை பரப்புகின்றனர். மேலும், தங்களது கடுமையான உழைப்பின் காரணமாக இந்திய திருநாட்டிற்கும், அவர்கள் வசிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், 4.7 லட்சம் கோடி ரூபாய் பணத்தை அனுப்புகின்றனர். இதன் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை தொடர்பு கொள்வது முக்கிய பணியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
